வடகொரியாவில் நிலவி வரும் பாரிய உணவு பஞ்சம் 2 வேளை மட்டும் உணவு உண்ணும் அவலம்!

 

வடகொரியாவின் அணு திட்டங்களால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் அந்த நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் கொரோனா தொற்று பரவலை தடுக்க வட கொரியா தனது எல்லைகளை மூடியது.

இதன் காரணமாக சீனாவுடனான வர்த்தகம் சரிந்தது. வட கொரியா தனது உணவு, எரிபொருள் மற்றும் உரத்திற்கு சீனாவை சார்ந்துள்ளது. இந்த நிலையில் வட கொரியாவில் கடுமையான உணவு பற்றாக்குறை நிலவுவதாக முதன்முறையாக அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டி குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது கிம் ஜாங் அன் இதனை தெரிவித்தார். “நாட்டு மக்களுக்கான உணவு சூழல் தற்போது சிக்கலாகி வருகிறது” என கூறிய கிம் ஜாங் அன், “கடந்த வருடம் ஏற்பட்ட சூறாவளி மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாய துறை உற்பத்தி இலக்கை அடையவில்லை” எனவும் தெரிவித்தார்.

அதேசமயம் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் இந்த காலாண்டில் தேசிய தொழில் துறை வளர்ச்சி பெற்றுள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில், கடந்தாண்டு பல சூறாவளி, வெள்ளம் என இயற்கை சீற்ற பாதிப்பும் அதிகமாக இருந்தது. அதனால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இவையனைத்தும் சேர்ந்து, தற்போது வட கொரியாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு ௧ கிலோ வாழைப்பழம் 3,336 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிளாக் டீ ஒரு பாக்கெட் 5,167 ரூபாய்க்கும்; காபி 7,381 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.இவ்வாறு பல உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது; அத்துடன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

வட கொரிய மக்கள், தினமும் இரண்டு வேளை மட்டும் கஞ்சி போன்ற உணவை சாப்பிடுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பல லட்சம் பேர் பட்டினி கிடப்பதாகவும் அவர்களில் பலர் 2 நாட்களுக்கு ஒருதடவை சாப்பிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உரத் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக உரம் தயாரிக்க, ஒவ்வொரு விவசாயியும் தினமும் 2 லிட்டர் சிறுநீர் அளிக்கும் படி, அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 1990களில், சோவியத் யூனியன் சிதறுண்டபோது, வட கொரியாவுக்கு தேவையான பொருட்கள் வினியோகம் தடைபட்டது.

அதனால், அப்போது கடும் பஞ்சத்தை வட கொரியா சந்தித்தது; அப்போது ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தில் 30 லட்சம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அது போன்ற கடுமையான பஞ்சத்தை சந்திக்கும் சூழல் வடகொரியா நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Views