இரணை தீவா ? இரணை மடுவா ? சாட்சியம் இல்லாத நிலையில் ஜனாசாக்களை என்ன செய்வார்கள் ?

இரணை தீவுக்கும், இரணை மடுவுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை புரிவதில் சிலருக்கு

குழப்பமான நிலை உள்ளதனை சில பதிவுகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

இரணை மடு என்பது கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தினை அண்டியுள்ள பகுதிகளாகும். சமாதான காலங்களில் பேச்சுவார்த்தைக்கு சென்று திரும்புகின்ற விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் போன்ற முக்கியஸ்தகர்கள் இந்த குளத்தில் “சீ ப்ளேன்” மூலமாக வந்திறங்கியதன் காரணமாகவும், இறுதி யுத்தத்தில் பாரிய தாக்குதல்கள் நடைபெற்ற இடம் என்பதனாலும் இரணமடு குளம் ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டது.

ஆனால் இரணை தீவு என்பது மன்னார் மாவட்டத்தின் நிருவாகத்தின்கீழ் வருகின்ற தீவுப்பகுதியாகும். இதற்கு தரைப்பாதைகள் கிடையாது. பல கிலோ மீட்டர் தூரம் படகின் மூலமாகவே இந்த தீவுக்கு செல்ல முடியும்.

அத்துடன் குறிப்பிட்ட இரண்டு பிரதேசங்களுக்கும் இடையில் பொதுவான ஒற்றுமைகள் காணப்படுகின்றது. அதாவது இன்னனும் விடுவிக்காமல் பொதுமக்களின் காணிகளை படையினரின் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருகின்றனர். மேலும் இப்பிரதேசங்கள் ஈரலிப்பான நிலத்தினைக் கொண்டதாகும்.

இலங்கையில் வரட்சியான எத்தனையோ முஸ்லிம் பிரதேசங்கள் இருக்கத்தக்கதாக, ஈரலிப்பான தமிழர் பிரதேசத்தில், எங்கையோ வாழ்கின்ற முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்குவதற்கு தீர்மாநித்ததானது அரசாங்கத்தின் மனோநிலையையும், அறிவினையும் வெளி உலகம் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.

அத்துடன் பாதைகள் இல்லாத இரணைதீவுக்கு ஜனாசாக்களை படகுகளில் அரச அதிகாரிகளினால் எடுத்துச் செல்லும்போது, மரணித்தவர்களின் உறவினர்களினால் அங்கு செல்லமுடியாத நிலை காணப்படும். அவ்வாறு செல்வதற்கு அனுமதித்தாலும் அது பாரிய சவால் நிறைந்ததாகவும், அதிக செலவுகளை ஏற்படுத்துவதாகவும் அமையும்.

இந்த நிலையில் எடுத்துச் செல்லப்படுகின்ற ஜனாஸாவை அடக்கம் செய்கின்றார்களா ? அல்லது வழமைபோன்று எரிக்கின்றார்களா ? என்பதனை அறிந்துகொள்வது பாரிய சவாலாக அமையும்.

எனவே இந்த விடையத்தில் அரசாங்கம் இதயசுத்தியுடன் செயல்படுவதென்றால், எந்த மாகாணத்தில் மரணிக்கின்றார்களோ அந்த மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்களை அன்மித்த வரட்சியான பிரதேசங்களை தெரிவு செய்து அங்கே அடக்கம் செய்வதுதான் பொருத்தமானதாகும்.

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது

The post இரணை தீவா ? இரணை மடுவா ? சாட்சியம் இல்லாத நிலையில் ஜனாசாக்களை என்ன செய்வார்கள் ? appeared first on Sri Lanka Muslim.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 Views