யாழ் யுவதிக்கு (ZOOM) செயலியில் தாலி கட்டிய மாப்பிள்ளை!

கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்த காரணத்தால் பொது மக்கள் ஒன்று கூடுவதற்கும், பொது நிகழ்வுகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மக்களும் கொரோனா அச்சத்தில்  தமது வாழ்வில் பல முக்கியமான விசேட நிகழ்வுகளை பிற்போட்டுள்ளனர்.
அந்தவகையில் கொரோனா காரணமாக பல மாதங்களாக பிற்போடப்பட்டுச் சென்ற திருமண நிகழ்வொன்று, இனி வேறு வழியின்றி தமது திருமணத்தை தொலைபேசியிலுள்ள சூம் செயலி மூலம் நடத்திமுடித்துள்ளமை பலருக்கும் வியப்பளித்துள்ளது.
குறித்த திருமணம் யாழ்ப்பாணத்திலுள்ள யுவதிக்கும், டென்மார்க்கிலுள்ள புலம்பெயர் தமிழ் இளைஞருக்கும் நேற்று வியாழக்கிழமை சூம் செயலியில் இடம்பெற்றது.
உரும்பிராயை சேர்ந்த யுவதியொருவருக்கு இந்த வருட ஆரம்பத்தில்,  டென்மார்க்கில் வதியும் ஊரெழுவை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நிச்சயிக்கப்பட்டது.
எனினும், கொரோனா ஊரடங்கு காரணமாக மணமகன் இலங்கைக்கு வருவதில் சிரமமிருந்தது.
கொரோனா முடிவற்று நீண்டு வரும் நிலையில், பல மாதங்களாக திருமணம் தள்ளிப் போய்கொண்டிருந்தது.
வருட இறுதியில் இலங்கை நிலவரம் சுமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாகி மீண்டும் நிலைமை மோசமாகியுள்ளது.
யுவதியின் சாதகப்படி இந்த வருட இறுதிக்குள் திருமணம் செய்ய வேண்டுமென யுவதியின் பெற்றோர் உறுதியாய் இருத்துள்ளனர்.
அதற்காக சூம் தொழில்நுட்பத்தில் தற்போது தாலி கட்டிக் கொள்வதென்றும், அடுத்த ஆண்டில் பதிவுத்திருமணம் செய்து கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டு, நேற்று இந்த நிகழ்வு நடந்தது.
இதன்படி சூம் தொழில்நுட்பத்தில் யுவதிக்கு, டென்மார்க் மாப்பிள்ளை தாலி கட்டினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுவாரஸ்ய திருமண நிகழ்வு உரும்பிராய் பகுதியில்  நடந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

47 Views