இயக்குனர் களஞ்சியத்தின் அடுத்த படைப்புக்கு முன் பதிவு செய்ய சென்ற போது இன்ப அதிர்ச்சி தந்த சமுத்திரகனி.

தோழர் சமுத்திரக்கனியை சந்தித்து எனது அடுத்த திரைப்படத்தில் நடிப்பது குறித்து பேசுவதற்காக அவரது அலுவலகத்திற்கு சென்றிருந்தேன்.
என் கதையில் அவருடைய கதாபாத்திரம் குறித்து என்னிடம் கேட்டு தெரிந்து கொண்ட பிறகு எனது படத்தில் நடிக்க மகிழ்வோடு ஒப்புக்கொண்டார்.
அதன் பிறகு நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார். அதாவது,
“கும்மிடிப்பூண்டியில் இருக்கிற ஈழ முகாமில் வசிக்கும் ஒரு பெண்ணை நீங்கள் படிக்க வைத்தீர்களாம். படிப்பு முடிந்த பிறகு, அந்தப் பெண் உங்கள் அலுவலகத்தில் வந்து உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று வந்திருக்கிறாள்…நீங்கள் அசோக் நகரில் இருந்த உங்கள் அலுவலகத்தை காலி செய்து விட்டு, வேறு இடத்திற்கு சென்று விட்டீர்களாம். அந்தப் பெண் இப்போழுது என் மனைவியின் தோழி. ஆகவே, அந்த பெண் உங்களிடம் நன்றி சொல்ல வேண்டும் என்று விரும்புகிறாள். பேசுறீங்களா??என்று கேட்டார்.
அதற்கு நான், “பெயர் தோழர்…”என்று கேட்டேன்.
“விதுர்ஷா…” என்றார்.
பெயரைக் கேட்டதும் எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது. விதுர்ஷா சகோதரிகள் இரட்டை குழந்தைகள். அந்த இரண்டு குழந்தைகளையும் பொறியியல் படிப்பு படிக்க வைப்பதற்கு அந்த குழந்தைகளின் அம்மா மிகவும் சிரமப்பட்டார். நான் அந்தக் குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்தேன். அதன் பிறகு பல்வேறு காரணங்களால் எனது அலுவலகம் மாறிவிட்டது.
ஆகவே, நீண்ட நாட்களுக்கு பிறகு தோழர் சமுத்திரக்கனி விதுர்ஷா குறித்துச் சொன்ன செய்தி எனக்கு மிகவும் இனிப்பான செய்தியாக இருந்தது.
உடனே பேசுகிறேன் என்று நான் சொன்னதும், தோழர் சமுத்திரக்கனி வேகமாக மாடியிலிருந்து கீழே ஓடி தன்னுடைய மனைவியிடம் சொல்லி, மனைவியின் அலைபேசியில் இருந்தே அழைத்து என்னிடம் பேச வைத்தார்.
விதுஷா எனது குரலை கேட்டதும், “அண்ணா எப்படி இருக்கீங்க…? என்று கலங்கி பேசினாள். படிக்க வைத்தாமைக்காக மீண்டும் மீண்டும் எனக்கு நன்றி சொன்னாள்…
அக்கா தங்கை இருவரும் படித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதாகவும் சொன்னாள். கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.
நீங்கள் இருவரும் சம்பாதித்து அம்மாவை நிம்மதியாக வைத்திருங்கள் என்று நான் சொன்னேன்.
நான் தங்கை விதுர்சாவோடு பேசுவதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த தோழர் சமுத்திரக்கனி நெகிழ்ந்து போனார். ‘’இப்படியான உதவிகளை செய்கிறபோது என் போன்றவர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் தோழர்’’ என்று சொன்னார்.
நான் அவரிடமிருந்து விடைபெற்று கிளம்பிய போது அவரது மனைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். வாசல் வரை வந்து அன்போடு என்னை அனுப்பி வைத்தார். தோழர் சமுத்திரக்கனி மனிதநேயமிக்க பண்பாளர். அவரை விட்டு பிரிந்து வந்த போது நம் உயிருக்கு நெருக்கமான எதையோ ஒன்றை விட்டு விட்டு வருகிற உணர்வு எனக்கு ஏற்பட்டது.’’ என பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

51 Views