பொம்பியோ இலங்கையில் விரும்புவதை பெற முடியாமல் போகும்

Published by T. Saranya on 2020-10-27 08:53:22

இலங்கைக்கு நாளை புதன்கிழமை வரவிருக்கும் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ சீனாவுடனான உறவுகளை மீளாய்வு செய்யுமாறும் அமெரிக்கா முன்வைக்கின்ற தெரிவுகளைப் பரிசீலனை செய்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் அமெரிக்க ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளுமாறும் இலங்கைத் தலைவர்களை நேருக்குநேர் வெளிப்படையாகக் கேட்பாரென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் தீர்மானங்களும் கொள்கைகளும் தேர்தல்களில் மக்களினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆணை, நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றின் பிரகாரம் அமையும் என்கிற அதேவேளை, பிராந்திய நாடுகளுடனும் சகல உலக நாடுகளுடனும் நல்லுறவுகள் பேணப்படும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் பவ்யமான முறையில் பொம்பியோவுக்கு கூறுவார்கள் என்று வெளியுறவு அமைச்சின் உயர்மட்ட அதிகாரியொருவர் கூறினார்.

நாட்டை எவ்வாறு நடத்த வேண்டுமென்று இலங்கையர்களுக்கு சொல்வது வெளியாரின் வேலையல்ல என்று மூன்று தலைவர்களும் அமெரிக்க இராஜாங்க அமைச்சருக்கு பண்பான முறையில் சொல்லி வைப்பார்கள் என்று தனது பெயரைக் குறிப்பிட வேண்டாமென்று கேட்டுக்கொண்ட அந்த உயர்மட்ட அதிகாரி சொன்னார்.

இனிமேலும், சீன நிதியுதவியுடனான திட்டங்களில் நாட்டம் காட்ட வேண்டாமென்றும் பரஸ்பரம் இணங்கிக்கொள்ளப்பட்ட முறையில் வேறு நாடுகளிடமும் சர்வதேச நிறுவனங்களிடமும் உதவியை நாடுமாறு பொம்பியோ அரசாங்கத்தை வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி  ஆணைக்குழுவொன்று முற்று முழுதாக நிராகரிக்க வேண்டும் அல்லது இலங்கையின் சட்டம், அரசியலமைப்பு மற்றும் சமூக , அரசியல், பொருளாதார யதார்த்த நிலைவரங்களுக்கு இசைவாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பிய 48 கோடி மிலேனியம் செலஞ் கோப்ரேசன் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறும் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் இலங்கையை வலியுறுத்துவார்.

சர்ச்சைக்குரிய படைகளின் அந்தஸ்து (சோபா) தொடர்பான  உடன்படிக்கை பொம்பியோவுடனான பேச்சுவார்த்தைகளில் ஆராயப்படப்போவதில்லை. ஏனென்றால், அது இலங்கையின் அரசியலமைப்புக்கும் சட்டங்களுக்கும் எதிரானது என்று அரசாங்கம் தெளிவாகக் கூறிவிட்டது என்றும் அந்த அதிகாரி சொன்னார்.

‘குவாட்’ போன்ற சீனாவுக்கெதிரான கூட்டணிக்குள் இலங்கையை இழுப்பதற்கான அமெரிக்க முயற்சி தொடர்பாக அந்த அதிகாரி பின்வருமாறு கூறினார்:

“30 வருடகால போரிலிருந்து அண்மையில் மீண்டெழுந்த இலங்கை, எந்தவகையிலும் சர்வதேச நெருக்கடியின் ஒரு களமாகுவதை விரும்பவில்லை என்று நாம் பொம்பியோவுக்கு கூறுவோம். ஆனால், இந்து சமுத்திரத்திலும்  ஏனைய சமுத்திரங்களிலும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதில் இலங்கை நாட்டம் கொண்டிருக்கிறது. 1971 ஆம் ஆண்டில் இலங்கைதான் இந்து சமுத்திரத்தை ஒரு சமாதான வலயமாக பிரகடனம் செய்ய வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தது என்பதை பொம்பியோவுக்கு நினைவுபடுத்துவோம்”

நாட்டை அபிவிருத்தி செய்வதில் குறிப்பாக உட்கட்டமைப்பு துறையில் பெரும் வளர்ச்சியில் அரசாங்கம் அக்கறை கொண்டிருப்பதால் சகல நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு முதலீடுகள் தேவைப்படுகின்றன என்று சீன முதலீடுகளை கைவிடுமாறு அமெரிக்கா முன்வைக்கும் கோரிக்கை தொடர்பாக தலைவர்கள் பொம்பியோவுக்கு சொல்வார்கள்.

“இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு அமெரிக்கா உட்பட சகல நாடுகளையும் நாம் வரவேற்கின்றோம். சீனா வழங்குகின்ற உதவிக்கு நிகரானதாக அமெரிக்காவும் மற்றைய நாடுகளும் வழங்க முன்வந்தால் அதை இலங்கை பரிசீலிக்கும்” என்று இன்னொரு வெளிவிவகார அமைச்சின் அதிகாரி கூறினார். ஆனால், சீனாவைப் பலவீனப்படுத்தி தனிமைப்படுத்துவதில் கவனத்தை செலுத்தும்  புவிசார் அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களில் அமெரிக்கா பிரதானமாக அக்கறை கொண்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் அது எந்தவொரு பொருளாதார முதலீட்டு யோசனையையும் முன்வைக்கப்போவதில்லை என்று தெரிகிறது. தனது பேச்சுவார்த்தைகளின் போது இந்த விவகாரங்களில் மேலும் முன்னோக்கி நகர்வது பொம்பியோவைப் பொறுத்தவரை சிக்கலானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

கடன்பொறி பிரச்சினை

“கடன்பொறி பிரச்சினையை பொம்பியோ கிளப்புவாரேயானால் இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடனான 5500 கோடி டொலர்களில் 560 கோடி டொலர்கள் மாத்திரமே சீனாவுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டியவை என்பதைக் காட்டுவதற்கு எங்களிடம் புள்ளிவிபரங்கள் இருக்கின்றன” என்று அந்த அதிகாரி சொன்னார். சீனாவிடம் அமெரிக்கா 1 ரில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பணத்தைக் கடனாகப் பெற்றிருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேரடி நெருக்குதல்

ஆனால், இலங்கை அபிவிருத்தித் திட்டங்களில் சம்பந்தப்பட்டுள்ள சீனக் கம்பனிகளுக்கு எதிராக மேலும் தடைகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்துவதன் மூலம் பொம்பியோ இலங்கைக்கு நேரடி நெருக்குதலைக் கொடுக்கக்கூடும்.  140 கோடி டொலர்கள் செலவிலான கொழும்புத் துறைமுகநகரத்தை நிர்மாணிக்கும் கம்பனியின் தாய்க்கம்பனியான சைனா கொமியூனிகேஸன் அன்ட் கொன்ஸ்ட்ரக்சன் கம்பனியின் சில துணை நிறுவனங்கள் வெளிப்படைத் தன்மையின்றி பாரபட்சமாக செயற்படுவதற்காக ஏற்கனவே தடை விதிப்புக்காக அமெரிக்காவினால் நிரற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அத்தகைய ஒரு சாத்தியத்தினால் இலங்கையர்கள் குழப்பமடைவார்கள் என்று தோன்றவில்லை. ஏனென்றால். தடை விதிப்புக்காக நிரற்படுத்தப்படுவது ஒரு காத்திரமான தளத்தின் அடிப்படையில் அமைய வேண்டியதாகும். பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாகக் காட்டப்பட்டால் கூட அமெரிக்காவில் அவை சட்ட நுண்ணாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அந்த இலங்கை அதிகாரிகள் விளக்கிக்கூறினர்.

ஆனால், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற ஆடை உற்பத்திகளை அமெரிக்கா நிறுத்துமானால் அல்லது குறைக்குமானால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படலாம். 250 கோடி டொலர்கள் பெறுமதியான இலங்கை ஆடை உற்பத்திகளை அமெரிக்கா வருடாந்தம் வாங்குகிறது. இது இலங்கையின் நிகர உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாகும். அத்துடன் இலங்கையின் ஆடை உற்பத்தி ஏற்றுமதியைப் பொறுத்தவரை தனியான மிகப்பெரிய சந்தையாக அமெரிக்காவே விளங்குகிறது. அமெரிக்கச் சந்தையில் இலங்கையின் ஆடை உற்பத்திகள் ஜி.எஸ்.பி தீர்வைச் சலுகைகள் இல்லாமலேயே பிரவேசிக்கின்றன என்பதை அடிப்படையாகக்கொண்டு நோக்கும் போது ஆடை உற்பத்தி இறக்குமதியை அமெரிக்கா நிறுத்துவது கூட சாத்தியமில்லாமல் போகலாம்.

இன நல்லிணக்கம்

இன நல்லிணக்கம் தொடர்பில் பொம்பியோ முன்வைக்கக்கூடிய யோசனைகளைப் பொறுத்தவரை, 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலிலும் 2020 ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தலிலும் நாட்டு மக்களிடமிருந்து பெற்ற ஆணைகளை இலங்கைத் தலைவர்கள் சுட்டிக்காட்டுவார்கள். இனப் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும் இலங்கையின் பெரும்பான்மை சமூகத்திற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதும் சகல சமூகங்களுக்கும் ஒப்புரவான முறையில் பயன்கள் கிடைக்கக்கூடியதாக நாட்டை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளின் மூலமாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுமே அரசாங்கம் பெற்ற ஆணையாகும்.

அமெரிக்க நோக்கம் இரகசியமல்ல

வாஷிங்டனில் அக்டோபர் 22 ஆம் திகதி தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதம உதவி இராஜாங்க அமைச்சர் டீன் தோம்ஸன் நடத்திய செய்தியாளர் மகாநாட்டில் அமெரிக்காவின் நோக்கங்களைத் தெளிவாகக் கூறினார். பாரபட்சமானதும் ஒளிவு மறைவானதுமான நடைமுறைகளுக்கு முரண்பட்டதாக வெளிப்படைத் தன்மையுடனான நிலைபேறான தெரிவுகளைப் பரிசீலனை செய்யுமாறு இலங்கையை பொம்பியோ உற்சாகப்படுத்துவாரென்று தோம்ஸன் கூறினார்.

“ நீண்டகால சுபீட்சத்துக்காக இலங்கை அதன் பொருளாதார சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஆனால், சங்கடமான தீர்மானங்களை எடுக்க வேண்டுமென்று நாம் வலியுறுத்துவோம். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் பங்காளிகளாவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். எமது இரு நாடுகளினதும் மக்களுக்கிடையிலான உறவுகள் ஜனநாயகம் மீதான பொதுவான பற்றுறுதி மற்றும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பிராந்திய கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் ஆகியவை குறித்தும் பொம்பியோ வலியுறுத்துவார். ஜனநாயக ஆட்சிமுறை, மனித உரிமைகள், நல்லிணக்கம், மத சுதந்திரம் மற்றும் நீதி ஆகியவற்றை மேம்படுத்துமாறும் இலங்கையை தொடர்ந்தும் வலியுறுத்துவோம்” என்றும் தோம்ஸன் சொன்னார். (டெய்லி எக்ஸ்பிரஸ்) 

பி. கே. பாலச்சந்திரன்

Source link

The post பொம்பியோ இலங்கையில் விரும்புவதை பெற முடியாமல் போகும் appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Views