சங்காவின் சராசரிகள் கூறும் சரித்திரக் கதைகள்

Kumar Sangakkara

டெஸ்ட் போட்டிகளில் 24.86 எனும்  சராசரியில் தனது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப வருடத்தை பூர்த்திசெய்தவர் தனது கிரிக்கெட் வாழ்வை  10,000 ஓட்டங்களை கடந்தவர்களுள் அதி கூடிய சராசரி உடையவராக நிறைவு செய்தார். கடந்த முப்பது வருடங்களில் ஆடி 5,000 ஓட்டங்களை கடந்தவர்களுள் ஸ்டீவ் ஸ்மித் தவிர்ந்து வேறு எந்த வீரரும் சங்காவின் 57.41 எனும் சராசரியை தாண்டவில்லை. 

டெஸ்ட் கிரிக்கெட்டின்  சிறந்த வீரர்களுள் ஒருவராக கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்திருக்கபோகும் குமார் சங்கக்காரவின் சிறப்பம்சமே சிறந்த சராசரியினை பேணியமை தான். டெஸ்ட் போட்டிகளில் நிலைத்திருந்து சிறந்த சராசரியினை தனது கிரிக்கெட் வாழ்வு முழுவதும் சீராக வைத்திருப்பது என்பது உண்மையில் சிரமமான விடயம். அவற்றை செய்துகாட்டியவர்களே வரலாற்றில் சிறந்தவர்களாக காணப்படுகின்றனர். அவ்வாறான வரலாற்றின் மிக சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சங்கா என்பதை இன்று முழு உலகும் ஏற்றுள்ளது.

>> துடுப்பாட்டத்தில் மஹேல செதுக்கிய சிற்பங்கள்

சங்காவின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வானது இரண்டு பாகங்களாக நோக்கப்படல் வேண்டும். சங்கா ஒரு விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக ஆடியது ஒரு பாகமாகவும், முற்றிலும் ஒரு துடுப்பாட்ட வீரராக ஆடியதை மற்றுமொரு பகுதியாகவும் ஆராய வேண்டும். 

சங்காவின் 57.41 எனும் சராசரி இந்த இரண்டு பாகங்களின் ஒன்றுசேர்ந்த சராசரியே ஆகும். சங்கா தான்  ஒரு துடுப்பாட்ட வீரராக ஆடிய போது  அவரது செயல்திறன் மிக அதிகமாகும். எனினும், விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக தனது அணிக்காக ஆடிய போதும் அவர் சிறப்பாகவே ஆடினார். சங்கா ஓர் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக 81 இன்னிங்ஸ்களிலும் விக்கெட் காப்பாளராக அல்லாமல் ஓர் துடுப்பாட்ட வீரராக மாத்திரம் 153 இன்னிங்ஸ்களிலும் ஆடினார். இவ்விரு பாகங்களின் போதும் அவர் பெற்ற சராசரி முறையே 40.48 மற்றும் 66.30 ஆகும். 

இதன்படி சங்கா வெறுமனே துடுப்பாட்ட வீரராக ஆடும் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். விக்கெட் காப்பாளர் என்ற பொறுப்புடன் துடுப்பாட்ட வீரராக ஆடிய போதும் கூட சங்கா நாற்பதுகளில் தனது சராசரியினை பேணியிருக்கிறார். விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக ஆடியவர்களுள் ஏபி டி வில்லியர்ஸ், ஆண்டி பிளவர், கில் க்ரிஸ்ட் மற்றும் அமெஸ் ஆகியோரே சங்காவை விட அதிகமான சராசரியினை கொண்டவர்களாக காணப்டுகின்றனர்.  

வெளிநாடுகளில் சராசரி 

சங்கா ஆடிய ஒவ்வொரு நாடுகளிலும் சங்காவின் சராசரியினை பார்த்தால் ஒரு விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக அவர் இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் மாத்திரமே 50 இற்கு குறைவான சராசரியினை கொண்டுள்ளார். ஆனால் அவர் வெறுமனே ஒரு துடுப்பாட்ட வீரராக இந்தியா மேற்கிந்திய தீவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நாடுகளிலும்  அடித்து துவம்சம் செய்திருக்கிறார் என்று தான் கூறவேண்டும். சில நாடுகளில் 100+ இற்கு அதிகமான சராசரியினையும் கொண்டுள்ளார். 

Watch – ஒரு மாதிரியாக நடைபெற்று முடிந்த LPL ஏலம் | Cricket Galatta Epi 42

ஒரு கிரிக்கெட் வீரரின் திறமை அவர் தனது  நாட்டிற்கு வெளியில் ஆடும் விதத்தை கொண்டே அளவிடப்படும். தனது நாட்டிற்கு வெளியில் சங்கா ஒரு விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக 52.0 எனும் சராசரியையும்  அதே நேரம் ஓர் துடுப்பாட்ட வீரராக மாத்திரம் ஆடி 60+ எனும் சராசரியையும் கொண்டுள்ளார். சங்கா ஓர் மிக சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பதற்கு இதுவே சிறந்த சான்று. 

ஆசியா தவிர்ந்த வெளிநாடுகளில் 

இலங்கை மற்றும் ஆசியாவை தவிர்த்தால் விக்கெட் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக 46.0 எனும் சராசரியினை பெற்ற சங்கா ஒரு துடுப்பாட்ட வீரராக மாத்திரம் ஆடி 60+ எனும் சராசரியை  பெற்று தனது துடுப்பாட்ட திறமையினை மீண்டும் நிரூபிக்கிறார். இதேபோன்று ஆசியா நாடுகள், ஜிம்பாப்வே ஆகியவற்றை நீக்கிவிட்டால் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக 43.94 எனும் சராசரியை  கொண்டவர் துடுப்பாட்ட வீரராக மாத்திரம் ஆடி 56.5 எனும் சராசரியை பெற்று அதிர்ச்சியளிக்கிறார். 

ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் ஆகியவை  தவிர்ந்து ஏனைய அணிகளுடன் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக 53.83 ஆக இருந்த சராசரி, ஒரு துடுப்பாட்ட வீரராக மாத்திரம் ஆடிய போது 62.3 இற்கு சடுதியாக அதிகரித்திருக்கின்றது. சங்கா இவ்வாறு அதி சிறப்பான சராசரிகளை கொண்டிருந்தாலும் அவர் தனது அணியின் வெற்றிக்காக தனது துடுப்பாட்ட திறமை மூலம் உதவினாரா என்ற கேள்வி நிச்சயம் எழும். இக்கேள்வியிற்கான விடை இலங்கை வெற்றி பெற்ற போட்டிகளில் சங்கா பெற்ற ஓட்டங்களும் சராசரிகளுமே ஆகும்.  

இலங்கையின் வெற்றிக்கு சங்கா 74.58 என்ற சராசரியில் ஓட்டங்களை குவித்தார். அதாவது, இலங்கை வெற்றிபெற்ற போட்டிகளில் சங்கா  பெற்ற  ஓட்டங்களின் சராசரி 74.58 ஆகும். ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் தவிர்ந்த ஏனைய அணிகளுடன்  ஆடி வெற்றி பெற்ற போட்டிகளில் 72.33 எனும் சராசரியுடன் காணப்படுகிறார் சங்கா. ஒட்டுமொத்தமாக பார்த்தாலும், ஜிம்பாப்வே பங்களாதேஷ் ஆகிய  அணிகளை தவிர்ந்து பார்த்தாலும்  ப்ரட்மான், இன்சமாம், கெர்ரி சோபர் ஆகியோரே சங்காவை விட  அதிகமான சராசரியினை  வெற்றிபெற்ற  போட்டிகளில் பெற்றவர்களாக காணப்படுகின்றனர்.  

>> முப்பதுக்கு பின் முன்னுரிமை டில்ஷான்

சங்கக்கார சதம் அடித்த பின் இலங்கை 50 வீதத்திற்கும்  அதிகமான போட்டிகளை (ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் தவிர்ந்த) வெற்றிபெற்றுள்ளது. சச்சின் மற்றும் லாரா ஆகியோர் சதம் அடித்த பின் அவர்களது அணிகள் பெற்ற வெற்றியின் வீதத்தை விட சங்காவின் வீதம் அதிகமாகும். 

சங்கக்கார ஏழு இன்னிங்ஸிற்கு ஒரு முறை சதம் பெற்றிருக்கிறார். எனினும், அவர் இலங்கை வெற்றிபெற்ற போட்டிகளில் நான்கு இன்னிங்சிற்கு ஒரு முறை சதம் பெற்றார். இது அவர் இலங்கையின் வெற்றிக்கு எந்தளவு பங்களிப்பு செய்தார் என்பதை எடுத்துகாட்டுகிறது. இன்னும் சொல்வதாயின் இது சச்சின், லாரா ஆகியோரைவிட  சிறந்த அடைவாகும். 

சங்கா மூன்றாம், நான்காம் இன்னிங்ஸ்களில் ஓட்டங்களை குவித்த வேகமானது பெரும் பெரும் டெஸ்ட் வீரர்களை விடவும் அதிகமாகும். மூன்றாம், நான்காம் இன்னிங்ஸ்களில் சங்கா 50 இற்கு அதிகமான சராசரியினை கொண்டுள்ளார். ஏனைய பெரும் டெஸ்ட் வீரர்கள் 50 இனை  நெருங்கவில்லை என்பது தான் உண்மை. 

எனினும் சங்கா, லாரா சச்சின் முகம்கொடுத்தது போன்று மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களிற்கு முகம் கொடுக்கவில்லை என்ற ஓர் குற்றச்சாற்று வர வாய்ப்புண்டு. ஆனால் , அது உண்மை அல்ல. ஆலன் டொனால்ட், மெக்ராத், அக்தர், வகார், வோர்ன், ஸ்டெய்ன், அண்டர்சன் போன்ற பந்துவீச்சாளர்களிற்கு எதிராக ஆடி 50 இற்கு அதிகமான சராசரியினை கொண்டுள்ளார் சங்கா.  

>> Army T20i லீக்கில் வெறியாட்டம் ஆடிய Dasun Shanaka..! 

மூன்றாம் நிலை வீரராக களமிறங்கி டெஸ்ட்  கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களை (11,000+)  குவித்த வீரராகவும், அதேபோன்று  மூன்றாம் நிலை வீரராக கடந்த ஐம்பது வருடங்களில் அதிக சராசரியினை  (77.00) கொண்ட வீரராகவும் சங்கா உள்ளார். 2006 ஆம் ஆண்டிற்கு பின் சங்காவின் சராசரி 50  விட குறைந்ததேயில்லை. 

சங்கா விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக இருந்து இரு விடயங்களில் ஈடுபட்ட போது அவரது சராசரி சற்று குறைவாக காணப்பட்டது. எனினும் அது மிகவும் மோசமானதாக காணப்படவில்லை. ஏனைய பெரும் வீரர்களோடு ஒப்பிடும் போதும் கூட அவரது சராசரி பலரது சராசரியினை விட சிறப்பாகவே காணப்படுகிறது. டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் முழுவதும் விக்கெட் காப்பாளராக செயற்பட்டு பின்னர் ஒரு துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இவ்வாறு சிறந்த சராசரியினை பேணுவது என்பது பாராட்டுக்குறியது. ஆனால் சங்கா முற்றிலும் துடுப்பாட்ட வீரராக ஆடிய போது அவரது சராசரி ஒருபோதும் 50ஐ விட குறையவேயில்லை.

கிரிக்கெட் உலகில் இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் சங்கக்கார என்ற பெயர் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட் கண்ட சிறந்த வீரர்களுள் ஒருவராக பல ஜாம்பவான்களை விட முன்னிலையில் சங்கா என்றென்றும் நிலைத்த்திருப்பர்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சங்கா.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

The post சங்காவின் சராசரிகள் கூறும் சரித்திரக் கதைகள் appeared first on ThePapare.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 Views