ஐடிஎச் வைத்தியசாலை ஊழியர்களுக்கு கொரோனா தொற்றாதது ஏன்? பொலிஸ் ஊடக பேச்சாளர் தகவல்

பொதுமக்கள் முழுவதுமாக சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்தால் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்றைய தினம் (26) கம்பஹா மாவட்டத்தில் 14 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது, பொதுமக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உண்மையில் இந்த நோய் ஏற்படாது என்பதற்கு சிறந்த உதாரணம் தான் ஐடிஎச் வைத்தியசாலை. முதல் கொவிட் நோயாளர் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி இனம் காணப்பட்டார். அவர் சிகிச்சைக்காக ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் பலர் அங்கு அனுமதிக்கப்பட்டனர்.

இன்றைய தினத்தில் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் அநேகமானோர் ஐடிஎச் வைத்தியசாலையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனக்கு சுகாதாரப் பிரிவினர் அறிவித்ததன் படி, நேற்றைய தினம் வரையில் ஐடிஎச் வைத்தியசாலையில் எந்த ஒரு ஊழியருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அதன் ரகசியம் என்ன? புதிதாக ஒன்றுமில்லை.

அதுதான் முகக் கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், அனைத்து சந்தர்ப்பங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகும். அங்குதான் அநேகமான கோவிட் நோயாளிகள் உள்ளனர். எனினும் ஒரு ஊழியருக்கு அல்லது சுகாதார பிரிவினருக்கும் இந்த நோய் பரவவில்லை. இவற்றை கடைப்பிடித்ததனால் இது சாத்தியமானது´ என்றார்.

The post ஐடிஎச் வைத்தியசாலை ஊழியர்களுக்கு கொரோனா தொற்றாதது ஏன்? பொலிஸ் ஊடக பேச்சாளர் தகவல் appeared first on jaffnavision.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 Views