இருபதில் ஹக்கீமின் நகர்வு…?

தற்போது 20ம் சீர்திருத்தங்கள் பற்றிய கதையாடல்களே எங்கும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் முஸ்லிம் பா.உறுப்பினர்களின் சில்லறைத்தனமான செயற்பாடுகள் பற்றிய விமர்சனங்கள் விண்னை பிளந்துகொண்டிருக்கின்றன. இந் நிலையில் மு.காவின் நிலைப்பாடு பற்றிய அலசல்களையும் அவதானிக்க முடிகிறது. மு.காவின் தலைவர் ஹக்கீம் 20ம் சீர்திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்க, ஏனைய மு.காவின் பா.உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இது பற்றி பல்வேறு ஊகங்களும், கதையாடல்களும் சென்று கொண்டிருக்கின்றன.

20க்கு யார், எவ்வாறான முடிவை எடுத்திருந்தாலும் பா.உறுப்பினர்களான ஹரீஸ், நஸீர் ஹாபிஸ் அகிய இருவரும், அதற்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள். இவர்கள் மொட்டுவுடன் மிக நெருங்கிய தொடர்பில் உள்ளனர். இவ்விடயத்தில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை. பா.உறுப்பினர் பைஸால் காசிமும் அரசோடு இணைந்து செல்வதே நல்லம் என்ற நிலைப்பாட்டில் இருந்தார். அவரது முடிவது தொடர்பில் எவ்வித ஊகங்களையும், முடிவுகளையும் கூற வரவில்லை. தௌபீக் எம்.பி மு.காவுக்கு விசுவாசமான ஒருவர் என்பதில் சந்தேகம் தேவையில்லை. அவர் ஏன் திடீரென எதிர்த்து வாக்களித்தார் என்பதே ஆழமாக சிந்திக்க வேண்டிய பகுதி.

இன்று இவ்விடயத்தில் கடும் விமர்சனத்துக்கும், நையாண்டிக்கும் உள்ளான ஒருவராக தௌபீக் எம்.பியை குறிப்பிடலாம். 20க்கு எதிரான கைப்பட்டியை அணிந்து கொண்டு, 20க்கு ஆதரவாக வாக்களித்தமையே அதற்கான காரணமாகும். இந்த எதிர்ப்பு கைப்பட்டி அணிந்த விவகாரமானது பல விடயங்களை புரிந்துகொள்ள போதுமான ஒரு விடயம். இவ் விடயமானது தௌபீக் எம்.பி 20ஐ எதிர்க்கும் மனோநிலையில் உறுதியாக இருந்துள்ளார் என்பதை துல்லியமாக்குகின்றது. அப்படியானால் அவருக்கு நடந்தது என்ன என்ற வினா எழலாம்.

மு.காவின் பா.உறுப்பினர்களான ஹரீஸ், நஸீர், பைஸால் காசிம் ஆகியோர் 20ஜ ஆதரிக்கும் தீர்மானத்தில் உறுதியாக இருந்தனர். மு.காவின் தலைவர் ஹக்கீம் 20ஐ ஆதரிக்கவே முடியாத நிர்ப்பந்தத்தில் இருந்தார். 20 இற்கு எதிராக அவசரப்பட்டு இரண்டு வழக்குகளை செய்திருந்தார். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதனை இப்போதைக்கு அலசத் தேவையில்லை. இரண்டு வழக்குகளை போட்டிருந்த மு.காவின் தலைவர், அதனை எப்படி ஆதரிக்க முடியும். அவ்வாறு ஆதரித்திருந்தால் பெரும் அவமானத்தை சந்திக்க நேர்ந்திருக்கும்.

மு.காவின் தலைவர் 20ஐ ஆதரிக்க வேண்டுமாக இருந்தால், தனது அரசியல் வியாபாரத்துக்கு பாதிப்பு வராவிட்டால், அவமானம் பற்றி எல்லாம் சிந்திக்காது, ஆதரவாக வாக்களிப்பது பற்றி சற்றேனும் சிந்தித்திருப்பார். அ.இ.ம.காவின் தலைவர் ரிஷாட் எதிராக வாக்களிக்கும் எண்ணத்தில் இருந்தார். அவர் எதிர்த்து வாக்களித்தால், ஹக்கீமின் அரசியல் வாழ்வு பெருமளவு பாதிப்பாக அமையும். இந்த சிக்கலான சூத்திரத்தினுள்ளும் மு.காவின் தலைவர் கை வைக்க விரும்பியிருக்கவில்லை.

முன்னரெல்லாம் மு.காவானது மஹிந்த அணியினரோடு சேர்வது பெரிதான ஒன்றாக இருக்கவில்லை. இம் முறை அது அவ்வளவு இலகுவான விடயமல்ல. சிங்கள மக்களின், பேரின அமைச்சர்களின் பெரும் எதிர்ப்பை சமாளிக்க நேரிடும். இதனை சமாளிக்க வேண்டுமாக இருந்தால், ஹக்கீமை மொட்டுக்குள் உள் வாங்கினாலும், முன்னர் போன்று பெறுமதியான அமைச்சுக்களை கொடுத்து கௌரவிக்க முடியாது. உரிய அமைச்சு ஹக்கீமுக்கு வழங்கப்படாது விட்டால், அது ஹக்கீமுக்கு பலத்த அவமானத்தை ஏற்படுத்தும். அவர்களது ஆதரவாளர்களை பெரும் விரக்திக்குள்ளாக்கும். இந்த நிலைக்குள் அகப்படவும் ஹக்கீம் விரும்பியிருக்கவில்லை.

மொட்டு அணியினரிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான கணக்கு தெளிவாக இருந்தது. ஹக்கீம் ஆதரிக்காது போனாலும், மு.காவினர்களை வைத்தே, அதனை உறுதி செய்ய முடியும். ஹக்கீமை உள்வாங்காது, அவரது கட்சி எம்.பிக்களை உள் வாங்கும் போது மு.கா நலிவடையும். இது மொட்டு எதிர்பார்த்த, மொட்டுக்கு சாதகமான ஒன்று. ஹக்கீமை தங்களுக்கு எடுக்க வேண்டிய அவசியமில்லை, அவரை உள்வாங்காமல் இருப்பதே தங்களுக்கு சாதகமானது எனும் போது, மொட்டு அணியினர் ஹக்கீமிடம் எவ்வாறு நடந்துகொண்டிருப்பார்கள் என்பதை ஊகிக்க இலகுவாக இருக்குமல்லவா. இவைகளே ஹக்கீமால் 20ஐ ஆதரிக்க முடியாமல் போனமைக்கு காரணாமாக சுட்டி காட்ட முடியும்.

ஹக்கீம் மொட்டுவதை ஆதரிப்பது பாதகமானது. அதே நேரம் கட்சியையும் பாதுகாக்க வேண்டும். மு.காவின் தலைவர் ஹக்கீம் 20ஐ ஆதரித்தாலும் சரி, ஆதரிக்காவிட்டாலும் சரி பா.உறுப்பினர்களான ஹரீஸ், நஸீர் ஆதரிப்பார்கள். பைசால் காசிமின் நிலைப்பாட்டை உறுதிபட குறிப்பிட முடியாது. இந் நிலையில் தௌபீக் எம்.பியும், ஹக்கீமும் எதிராக வாக்களித்தால் மு.கா பிளவுபட்டுள்ளமை தெளிவாகும். இதனை இல்லாமல் செய்ய தௌபீக்கையும் எதிராக வாக்களிக்க சொல்வதே பொருத்தமானது. தலைவர் எதிர்க்க, ஏனையோர் ஆதரித்துள்ளனர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் தந்திரமே அங்கு பயன்படுத்தப்பட்டது. அடுத்த நாளே இத் தோற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் மு.காவின் பாராளுமன்ற குழு ஒன்று கூடி புகைப்படம் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் கட்சி கட்சியாகவே பயணிக்க முடியும் என நாம்பினார்.

இதனை சாதகமாக பயன்படுத்திய மு.காவின் எம்.பிக்கள் தலைவர் தான் எங்களை ஆதரவாக வாக்களிக்க சொன்னதாக பகிரங்கமாக கூறியுள்ளனர். தலைவர் ஆதரிக்க சொல்லியிருந்தால், அது தலைவரின் வழிகாட்டலாக இருந்திருந்தால், இவர்கள் தலைவர் தான், தங்களை ஆதரிக்க சொன்னதாக கூற வேண்டிய அவசியமில்லை, கூறியிருக்கவுமாட்டார்கள். இவ்விடயத்தில் எக் கருத்தையும் கூறாது தவிர்ந்திருப்பார்கள். இந்த முரண்பாடே இரு குழுக்களின் முடிவும் கலந்து பேசி எடுக்கப்பட்டதல்ல என்பதை துல்லியமாக்கின்றது. தலைவர் தான் ஆதரிக்க சொன்னதாக ஹரீஸ் கூறியதால், தான் ஆதரிக்கவில்லை என கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஹக்கீமுக்கு உள்ளது. இது, தான் கழன்று ஹக்கீமை அகப்படச்செய்யும் ஹரீஸின் தந்திரத்திலொன்று.

இப்போது, தான் ஆதரிக்க கூறவில்லை என ஹக்கீம் தெரிவித்துள்ளார். மு.காவின் உயர் பீடமும் ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளது. இவ்விடயத்தில் மு.காவின் உயர்பீடம் எந்த முடிவையும் எடுக்காத நிலையில், எப்படி விளக்கம் கோரி கடிதம் அனுப்ப முடியும். இது இவ்விடயத்தில் அவர்கள் முறையாக நடந்துகொள்ளாமையை தெளிவு செய்கிறது. இதுவே மு.காவின் தொடர்ச்சியான செயற்பாடும் கூட.

இது தொடர்பில் மு.காவின் உயர் மட்டத்தினர் அனைவரும் மௌனம்காக்க தவம் மாத்திரம் துள்ளி குதித்து கொண்டிருக்கின்றார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனது தோல்வியை வடிவமைத்த ஹரீஸை மு.காவிலிருந்து துரத்தும் சந்தர்ப்பமாக, இதனை கருதுகிறார் தவம். தற்போது இப்படியும் ஒரு குழு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இது தொடர்பில் கடுமையான தீர்மானங்கள் எதனையும் ஹக்கீம் எடுத்தால் கட்சி அழிந்துவிடும். இவர்களுக்கு எதிராக எதுவும் நடக்காது. இருப்பினும் மு.காவினுள் ஒரு பாரிய பிளவை எதிர்பார்க்க முடியும். தற்போது மு.காவானது பிளவடைந்துவிட்டதா, இல்லையா என்ற வினாவுக்கு பதில் இல்லாது போனாலும் அமைச்சரவை மாற்றமொன்று நிகழும் போது அனைத்தும் புலப்படும்.

The post இருபதில் ஹக்கீமின் நகர்வு…? appeared first on Sri Lanka Muslim.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 Views