4 ஆண்டு பயணத்திற்கு பிறகு தரையிறங்கிய நாசா விண்கலம்

4 ஆண்டு பயணத்திற்கு பிறகு பென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசா விண்கலம்

பென்னு குறுங்கோளில் தரையிறங்கிய விண்கலம்
பூமியில் இருந்து 330 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறுங்கோள்களான பென்னுவை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘ஓசிரிஸ்-ரெக்ஸ்’ எனப்படும் செயற்கை கோளை அனுப்பியது. 2016ம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த செயற்கைக் கோள், 2018ம் ஆண்டு பென்னு குறுங்கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து சீராக பயணம் மேற்கொண்டது.
அதன்பின்னர் படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டு நேற்று பென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பென்னு  குறுங்கோளில் இருந்து பாறைத் துகள்களை ஆய்வுக்காக பூமிக்கு எடுத்துவர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஓசிரிஸ் ரெக்ஸ் செயற்கைக் கோளில் உள்ள இயந்திரக் கரங்கள் குறுங்கோளை துளையிட்டு பாறைத் துகள்களை எடுக்கத் தொடங்கியது. இதேபோல் தூசித் துகள்களையும் சேகரிக்கிறது.
4 ஆண்டு பயணத்திற்கு பிறகு ஓசிரிஸ்-லெக்ஸ் வெற்றிகரமாக பென்னுவில் தரையிறங்கியதும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பென்னுவில் தரையிறங்கும் நிகழ்வு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட சுமார் 18.5 நிமிடங்கள் முன்னதாகவே நிகழ்ந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். திட்டமிடப்பட்ட அளவு துகள்களை விண்கலம் சேகரித்துள்ளதா? என்பது சனிக்கிழமைதான்  தெரியவரும் என்றும் கூறினர்.
பென்னுவில் இருந்து குறைந்தபட்சம் 60 கிராம் அளவிற்கு பாறைத் துகள்களை ஆய்வுக்கு எடுத்து வர விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் விண்கலம் 2 கிலோ கிராம் வரை பாறைத் துகள்களை எடுக்கும் திறன் கொண்டது என்பதால் கூடுதல் சாம்பிள்கள் வர வாய்ப்பு உள்ளது.
பென்னு குறுங்கோளில் தனது பணிகளை முடித்துக்கொண்டு ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அங்கிருந்து புறப்பட்டு, 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் ஏவப்பட்ட ஹயாபுசா-2 விண்கலம், மற்றொரு குறுங்கோளான லியுகுவில் இருந்து கடந்த ஆண்டு பாறைத் துகள்களை எடுத்தது. அந்த விண்கலம் தற்போது பூமியை நோக்கி வந்துகொணடிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 Views