20 ஆவது திருத்தச் சட்ட விவாதம் ஆரம்பம்…

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று (21.10.20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மற்றும் நாளை காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் விவதாம் நடைபெறவுள்ளதுடன் நாளை இரவு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

சமகால அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை, சபாநாயகரினால் நேற்று (20) பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த விவாதம் இன்று தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உச்ச நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட குறித்த மனுக்களின் பரிசீலனை, கடந்த ஒக்டோபர் 05 ஆம் திகதி நிறைவுக்கு வந்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குழுநிலை சந்தர்ப்பத்தின்போது மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு மேலதிகமாக 20 ஆவது திருத்த சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மேலும் சில மாற்றங்களுக்கு அமைச்சரவை நேற்று முன்தினம் அங்கீகாரமளித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர சந்திபில் அதுதொடர்பாக அறிவிக்கப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவுத் திருத்தங்கள் இருபதாவது திருத்தச் சட்டமூலத்தை அரச வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் 2020 செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறித்த திருத்தச் சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்மானங்களைக் கருத்தில் கொண்டு சட்டமூலம் தொடர்பான பாராளுமன்றக் குழுநிலை விவாதத்தின் போது சமர்ப்பிக்கப்படவுள்ள முன்மொழிவுகள் நீதி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும், கீழ்க்குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பான ஏற்பாடுகள் இருபதாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பாக குழு நிலை விவாதத்தின் போது இணைத்துக்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களிலும் தேங்கியுள்ள பெரும் எண்ணிக்கையிலான வழக்குகளைக் கருத்தில் கொண்டு குறித்த நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள்.

தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த நிலைமைகளின் போது மேலெழும் விடயங்களுக்கமைவான சட்டங்கள் மாத்திரம் அவசரச் சட்டங்களாகக் கருதப்பட்டு பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள்.

அரச கூட்டுத்தாபனங்கள் அல்லது அரசாங்கத்தால் அல்லது கூட்டுத்தாபனத்தினால் 50 சதவீத பங்குகள் அல்லது அதற்கு அதிகமான பங்குகளைக் கொண்ட கம்பனிகளைக் கணக்காய்வு செய்யும் அதிகாரம் கண்காய்வாளர் நாயகம் அவர்களுக்கு வழங்கும் வகையிலான ஏற்பாடுகள்

அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கை, அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்களின் எண்ணிக்கை மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பதற்கான 19 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளை 20 ஆவது திருத்தச் சட்டத்திலும் அவ்வாறே உள்ளடக்குதல்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திலுள்ள நான்கு சரத்துகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் இந்த தீர்மானத்தில் குறிபிபட்டுள்ளது.

இதில் இரண்டு சரத்துகள், குழுநிலை சந்தர்ப்பத்தில் மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு அமைய நிறைவேற்றப்படுமானால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரம் போதுமானது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் முன்வைத்துள்ள மற்றுமொரு சரத்தில் உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அந்த சரத்தையும் நிறைவேற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு சட்டமூலம் அரசியலமைப்பின் 82 /1 சரத்திற்கு அமைவானது என்பதையும் அரசியலமைப்பின் 82/5 ஆம் சரத்திற்கு அமைவாக விசேட வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையும் சட்டமூலத்தின் 3, 5, 14 மற்றும் 22 ஆகிய சரத்துகள் அரசியலமைப்பின் 83 ஆவது சரத்தின் பிரகாரம் மக்களால் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், 3 மற்றும் 14 ஆவது சரத்துகளை உத்தேச குழுநிலை சந்தர்ப்பத்தின்போது சீர்த்திருத்துவதாக இருந்தால், அதனை நீக்க முடியும் எனவும் 5 ஆவது சரத்தில் இருக்கும் விடயத்திற்கு அமைவாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருப்பது போன்று மறுசீரமைப்பை மேற்கொண்டால் அதனையும் நீக்கிக்கொள்ள முடியும் எனவும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது

தற்போதைய அரசியலமைப்பில் ஜனாதிபதியின் அதிகாரங்கள், பொறுப்புக்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள 33 ஆவது சரத்தை மாற்ற வேண்டும் என 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை மாற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்றம் கூட்டப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்க வேண்டும் என 20 ஆவது திருத்தத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த காலப்பகுதியை இரண்டரை வருடங்கள் வரை நீடிப்பதற்கான திருத்தத்தை குழுநிலை சந்தர்ப்பத்தின் போது இணைக்கவுள்ளதாக அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. திருத்தமும் மேற்கொள்ளப்படுமாயின், சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் ஐந்தாவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் விடுபாட்டுரிமையும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமே மாற்றப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அடிப்படை உரிமைகள் தொடர்பிலான விடயங்களில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த விடுபாட்டுரிமை 19 ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்டபோதிலும் 20 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு பூரண விடுபாட்டுரிமை கிடைக்க வேண்டும் என பிரேரிக்கப்பட்டிருந்தது. அரசாங்கம் முன்வைக்கும் திருத்தங்களை உள்ளடக்கினால் சர்வஜன வாக்கெடுப்பின்றி அந்த சரத்தையும் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருத்த சட்டமூலத்தின் 22 ஆவது சரத்தை நிறைவேற்றுவதற்கும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்பதே உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடாகும்.

The post 20 ஆவது திருத்தச் சட்ட விவாதம் ஆரம்பம்… appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

41 Views