பாக். தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜிம்பாப்வே பயிற்றுவிப்பாளர்!

Lalchand Rajput

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில், ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் லால்சந்த் ராஜ்பூட் இணையமாட்டார் என ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் தொடருக்கான ஜிம்பாப்வே குழாம் நேற்றைய தினம் இஸ்லாமாபாத்தை அடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பினை ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. 

>> பாகிஸ்தான் அணியிலிருந்து மலிக், சர்பராஸ், ஆமிர் அதிரடி நீக்கம்

ராஜ்பூட்டின் வெளியேற்றம் குறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் செல்வதற்கான அனுமதியை, பாகிஸ்தான் தூதரகத்திடம் தருமாறு கோரியிருந்தோம், ஆனால், எமது நாட்டில் உள்ள இந்திய தூதரகம் பாகிஸ்தான் செல்வதற்கு ராஜ்பூட்டுக்கு அனுமதியில்லை என கடிதமொன்றை அனுப்பியுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேநேரம், ஹராரேவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள கடிதத்தில், “ராஜ்பூட் ஒரு இந்திய பிரஜை. இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டல் மற்றும் விதிமுறையின் படி, இந்திய பிரஜையொருவர் பாகிஸ்தானுக்கு செல்லமுடியாது. அதன்படி, ராஜ்பூட் பாகிஸ்தான் செல்வதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் லால்சந்த் ராஜ்பூட் பாகிஸ்தான் தொடருக்கான ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படமாட்டார். இந்தநிலையில், ராஜ்பூட்டின் இடத்துக்கு, ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் டக்ளஸ் ஹொண்டா நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜிம்பாப்வே அணி லாஹூரில் நடைபெறவுள்ள மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு முன்னர், ராவல்பிண்டியில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

>> Video – டோனி ஏன் நடராஜனிடம் விக்கெட்டினை கொடுத்தார்? | Cricket Galatta Epi 41

ஜிம்பாப்வே அணி தங்களுடைய தொடருக்காக பாகிஸ்தான் செல்வதற்கு முன்னர், இம்மாத ஆரம்பத்தில் ஜிம்பாப்வேயின் ஐவர் கொண்ட தூதுக்குழுவொன்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்தது. இந்த குழு, பாகிஸ்தானில் உள்ள உயிரியல் பாதுகாப்பு வலையம் தொடர்பில் ஆராய்ந்த பின்னரே, ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.  

பாகிஸ்தான் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, பயணத்துக்கு முன்னர் ஹராரேவில் வைத்து கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், பாகிஸ்தான் சென்றடைந்த பின்னரும் கொவிட்-19 பரிசோதனைக்கு முகங்கொடுக்கவுள்ளது.

ஜிம்பாப்வே அணி, 2009ம் ஆண்டு இலங்கை அணி மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர், கடந்த 2015ம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்காக பாகிஸ்தான் சென்றிருந்தது. அதன் பின்னர், தற்போது தங்களுடைய இரண்டாவது தொடருக்காக பாகிஸ்தான் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<

The post பாக். தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜிம்பாப்வே பயிற்றுவிப்பாளர்! appeared first on ThePapare.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

39 Views