சுகாதாரசேவைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் சவால்களையும் வெற்றிகொள்ள நீண்டகால செயற்திட்டத்தை தயாரிக்க எதிர்பார்த்துள்ளோம் – பவித்திரா வன்னியாராச்சி
Published by T. Saranya on 2020-10-21 15:04:26
(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவல் உள்ளடங்கலாக நாட்டின் சுகாதாரசேவைக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளையும் சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நீண்டகால அடிப்படையிலான செயற்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் இருதயநோய்களுக்கான விஞ்ஞான பீடத்தின் 20 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
தற்போது இலங்கை பல்வேறு புதிய சவால்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. அவற்றில் தொற்றாநோய்கள் மற்றும் இருதயநோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு நீண்டகால அடிப்படையிலான நிரந்தர தீர்வைக் கண்டறிவது மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக மாறியிருக்கின்றது. எனவே சுகாதாரப்பிரிவின் உரிய அதிகாரிகள் மற்றும் நிபுணர்களிடம் கலந்துரையாடி, ஆலோசனைபெற்று இந்த சவாலை எதிர்கொள்ளக்கூடிய வகையில் நீண்டகால நோக்கிலான செயற்திறன் மிக்க செயற்திட்டமொன்றைத் தயாரிப்பதே எனது எதிர்பார்ப்பாக உள்ளது.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் இருதயநோய்களால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை உயர்வாக இருக்கும் நிலையில், நோயாளர்களைக் கையாள்வதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இருதயநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அவசியமான சத்திரசிகிச்சை வசதிகள், அவசர சிகிச்சைப்பிரிவு, நோயாளர்களுக்கான தங்குமிட வசதிகள் ஆகியவற்றை உருவாக்குவது குறித்தும் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
உலகம் முழுவதிலும் சுகாதாரக்கட்டமைப்பு மிகவேகமான மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றது. நவீன சிகிச்சைமுறைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சுகாதாரத்துறையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே இவ்வாறானதொரு நெருக்கடி மிக்க சூழ்நிலையில் இலங்கைப் பிரஜைகளுக்கு பயனுறுதி வாய்ந்த சுகாதார சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் சர்வதேசத்துடன் எப்போதும் தொடர்பிலிருப்பது அவசியமாகும்.
எமது நாட்டின் சுகாதாரத்துறை வரலாற்றைப் பொறுத்தவரையில், நாம் போலியோ மற்றும் மலேரியாவை இல்லாதொழித்திருப்பதுடன் தாய், சேய் நலன்பேணலில் உயர்மட்டத்தில் இருக்கிறோம். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் சராசரியாக ஒருவரின் ஆயுட்காலம் உயர்மட்டத்திலேயே இருக்கிறது.
எனினும் மருந்துப்பொருட்களின் கிடைப்பனவை உறுதிசெய்து கொள்வதற்காக மருந்துப்பொருட்கள் தொடர்பான தேசிய கொள்கையொன்றை செயற்படுத்தல் மற்றும் உள்நாட்டு மருந்துப்பொருள் உற்பத்தியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அதனூடாக அனைவராலும் கொள்வனவு செய்யக்கூடிய விலையில் மருந்துப்பொருட்களை வழங்கமுடியும். சுயாதீனமான சுகாதாரசேவையின் ஊடாக நாட்டுமக்கள் அனைவருக்கும் உயர்மட்டத்திலான தரமான சுகாதாரசேவையைப் பெற்றுக்கொடுப்பதே ஜனாதிபதியின தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்துவருகின்றோம் என்றார்.
The post சுகாதாரசேவைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் சவால்களையும் வெற்றிகொள்ள நீண்டகால செயற்திட்டத்தை தயாரிக்க எதிர்பார்த்துள்ளோம் – பவித்திரா வன்னியாராச்சி appeared first on Helanews.