கொரோான இரண்டாம் அலை குறித்த உண்மையான தகவல்களை வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் – ருவன் விஜேவர்தன

Published by T. Saranya on 2020-10-19 13:04:00

(நா.தனுஜா)

அரசாங்கத்தின் கவனயீனமான செயற்பாடுகளே கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலைக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன, வைரஸ் பரவலின் இரண்டாம் அலை எவ்வாறு ஆரம்பமானது என்பது பற்றிய உண்மையான தகவல்களை வழங்கமுடியாத நிலையில் அரசாங்கம் இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் விரைவில் குணமடைவதற்குப் பிரார்த்திக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பௌத்த வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

அரசாங்கத்தின் கவனயீனமே கொவிட் – 19 வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஏற்படுவதற்கான பிரதான காரணமாகும்.

வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஆரம்பமான விதம் மற்றும் அது மிகவும் பாரதூரமான வகையில் பரவலடைந்த முறை என்பன தொடர்பான உண்மையான தகவல்கள் இதுவரையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படவில்லை.

அதுமாத்திரமன்றி கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் சில பகுதிகள் முடக்கப்பட்டிருக்கின்றன. அப்பகுதிகளில் இதுவரை காலமும் நாளாந்தம் தொழில்செய்து வருமானம் உழைத்து வந்தவர்கள் தற்போது தமது வாழ்வாதாரத்தை இழக்கும் அளவிற்கு வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

எனினும் இதுகுறித்து அவதானம் செலுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அரசாங்கம் தவறியிருக்கிறது. குறிப்பாக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் இதனால் பெருமளவில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Source link

The post கொரோான இரண்டாம் அலை குறித்த உண்மையான தகவல்களை வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் – ருவன் விஜேவர்தன appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

35 Views