உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பதினோராவது தடவையாக சாட்சியமளித்த முன்னாள் பொலிஸ் மா அதிபர்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர நேற்று முன்தினம் பதினோராவது தடவையாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியங்களை வழங்கியுள்ளார்.

இதன்போது, மேலதிக மன்றாடியார் நாயகம் முன்னாள் பொலிஸ் மா அதிபரின் புலனாய்வு தகவல்களைக் கொண்ட ஒரு ஆவணத்தை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இது தாக்குதலுக்கு முதல் நாள் அவருக்கு அரச புலனாய்வு சேவையால் அனுப்பப்பட்ட ஆவணமாகும்.

அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர், நிலந்த ஜெயவர்தன அனுப்பிய குறித்த ஆவணத்தில் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவருக்கு நெருங்கியவர்கள் பற்றிய விரிவான தகவல்கள் இருந்ததா என்று அவர் சாட்சியைக் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த பூஜித் ஜெயசுந்தர, குறித்த ஆவணம் பயங்கரவாதிகள் பற்றி இதற்கு முன்னர் அரச புலனாய்வுத்துறை அனுப்பிய வேறு எந்த ஆவணத்தையும் விட விரிவான தகவல்களைக் கொண்டிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மாவனெல்லவில் புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்டமை, சஹ்ரான் மற்றும் சகோதரர்கள் சினமன் கிராண்ட் மற்றும் ஷங்ரி-லா விருந்தகங்களில் தற்கொலை தாக்குதல்களை நடத்திய தெமட்டகொடவைச் சேர்ந்த இப்ராஹிம் சகோதரர்கள் பற்றிய தெளிவான தகவல்கள் இதில் இருந்தன.

இதனை மிகவும் சிறப்பு வாய்ந்த ஆவணமாக தமது கவனத்திற்கு வந்ததாக பூஜித் ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளையில் சாட்சியிடம் கேள்வித்தொடுத்த கூடுதல் மன்றாடியார் நாயகம், ஒரு ‘சிறப்பு புலனாய்வு ஆவணம்’ என்று தனது கவனத்திற்கு வந்தால் அது குறித்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பூஜித் ஜெயசுந்தர, தகவல் எவ்வளவு விரிவானது என்பதை விட 2019 ஏப்ரல் 20ஆம் திகதி மாலை அனுப்பப்பட்ட இந்த ஆவணத்தில் இந்த தகவல்கள் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்படுவதாக தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதன்போது அடுத்த நாள் தாக்குதல் நடத்தப்படும் என்று அரச புலனாய்வுதுறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தன கூறினாரா என்று சாட்சியான பூஜித் ஜெயசுந்தரவிடம் கூடுதல் மன்றாடியார் நாயகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த நாள் ஆபத்தானது, எதுவும் நடக்கலாம் என்று நிலந்த ஜெயவர்த்தன தெரிவித்ததாக பூஜித் ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இது முன்னர் தகவல்களை வழங்கிய அதே வெளிநாட்டு புலனாய்வு அமைப்பிலிருந்து வந்ததா என்று தாம் அவரிடம் கேட்டபோது ஆம் என்று பதிலளித்ததாக கூறியுள்ளார்.

எனினும் அந்த நேரத்தில், இந்த தகவலை உறுதிப்படுத்த நிலந்த ஜெயவர்த்தனவிடம் எவ்விதமான தகவல்களும் இருக்கவில்லை பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இலங்கை பொலிஸின் பலவீனம் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன என்று கூடுதல் மன்றாடியார் நாயகம் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

சம்பவத்தின்போது பொலிஸ் மா அதிபராக இருந்தமையால் குறித்த தாக்குதல் தொடர்பில் தனக்கு ஒரு பொறுப்பு இருப்பதாக ஜெயசுந்தர ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று நான் எந்தக் கட்டத்திலும் சொல்லவில்லை. நான் அதை ஒருபோதும் சொல்லபோவதில்லை. ஆனால் நான் மட்டும் பொறுப்புக்கூறக்கூடிய நபர் அல்ல. பொலிஸின் பலவீனம் காரணமாக இது நடந்தது என்பதை நான் ஏற்கவில்லை. நாம் எதிர்கொள்ளும் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியிலேயே பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்தனர் என்று சாட்சியான பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்குப் பின்னால் மர்மமான காரணங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான விசாரணைகள் எவ்வாறு திரும்பின, நடைமுறையில் உள்ள அரசியல் சூழல், வெளிநாட்டுப் பணத்தைப் பெறுதல் மற்றும் தகவலறிந்தவர்களைத் திருப்புதல், இதே போன்ற பல இரகசிய மற்றும் தீவிர ரகசிய காரணங்கள் உள்ளன.

தாம் பாதுகாப்பு சபையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தமக்கு பதிலாக அந்த கூட்டங்களில் பங்கேற்ற பொலிஸின் மூத்த அதிகாரியிடம் பாதுகாப்பு பேரவையில் பேசப்படுகின்ற விடயங்களை தம்மிடம் வெளியிடவேண்டாம் என்று இரகசியமாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன என்றும் சாட்சியான பொலிஸின் முன்னாள் அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆணைக்குழுவின் முன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

38 Views