13 வயது பாலச்சந்திரன் புலிகளின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாம் சரத் பொன்சேகா புதுக் கண்டுபிடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாக செயல்பட்டார் என தெரிவித்திருக்கும் முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாலச்சந்திரனை இராணுவத்தினர் கொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றய அவர் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தபோது இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனிற்கு உணவு, தண்ணீர் வழங்கி, அவரை இலங்கை இராணுவமே சுட்டுக் கொலை செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து கஜேந்திரனின் கருத்துக்கு எதிா்ப்பை வெளியிட்ட சபையிலிருந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் கஜேந்திரனின் கருத்து உண்மைக்கு புறம்பானது எனவும் , அதனை ஹன்சார்ட் பதிவிலிருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து, ஒழுங்கு பிரச்சனையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் ஃபொன்சேனா, பாலச்சந்திரன் கூட பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாக செயல்பட்டார் எனவும் சரத் பொன்சேகா கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இராணுவ சீருடையில் இராணுவ படையை வழிநடத்தியதாகவும், பிரபாகரனின் மனைவி புலிகளின் விநியோக பிரிவிற்கு பொறுப்பானவராக செயல்பட்டதாகவும் சரத் பொன்சேனா குறிப்பிட்டார்.

அத்துடன், பிரபாகரனின் மூத்த மகன் அந்த அமைப்பின் கேர்ணலாக செயல்பட்டதுடன், அவரது மகள் பயங்கரவாத அமைப்பின் பெண்கள் பிரிவில் மேஜராக செயற்பட்டார் எனவும் தொிவித்துள்ளாா்.

பிரபாகரனின் இளைய மகன் பதுங்கு குழியொன்றில் இருப்பதை போன்றதொரு புகைப்படத்தையே தாம் பின்னர் அவதானித்ததாகவும், தமிழர்கள் அணியும் சாரத்தை போன்றதொரு உடையை அவர் அணிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த சிறுவன் இராணுவத்திடம் கிடைத்திருந்தால், சாரம் அணிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்காது என்பதுடன், அவர் சேர்ட் மற்றும் கால்சட்டை அணிந்திருந்திருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

The post 13 வயது பாலச்சந்திரன் புலிகளின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாம் சரத் பொன்சேகா புதுக் கண்டுபிடிப்பு appeared first on Vakeesam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

33 Views