வவுனியா ஊடக அமையத்தின் கடும் கண்டனம்!!

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு வவுனியா ஊடக அமையம் கண்டனம்!!

முல்லைத்தீவு மாட்டத்தின் ஊடகவியலாளர்களான தவசீலன் மற்றும் குமணன் மீதான தாக்குதலை வவுனியா ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கிறது.

முல்லைத்தீவில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மரக் கடத்தல்காரர்களால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

முல்லைத்தீவில் நில அபகரிப்பு , காடழித்தல், மண் அகழ்தல் போன்றவற்றிற்கு எதிராக குறித்த ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக துணிச்சலுடன் செயற்பட்டு வத்ததுடன் அவை தொடர்பான செய்திகளை ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்துள்ளனர். ஊடகவியலாளர்களின் இச் செயற்பாடு இயற்கை வளங்களை சூறையாடும் கடத்தல்காரர்களுக்கும் அதற்கு துணைபோகும் அதிகாரிகளுக்கும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது.

இதன் காரணமாக தொடர்ச்சியாக குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் திட்டமிட்ட வகையில் தாக்கப்பட்டு காணொளிகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறித்த சமூக விரோதிகள் தமது கடத்தல் நடவடிக்கைகளுக்காக எதையும் செய்யத் துணிந்துள்ளார்கள் என்பதையும் அவர்களுக்கு பின்னால் பலமான பின்னணி இருப்பதையும் உணர்த்தியுள்ளது.

யுத்தகாலத்திலும் யுத்தத்தின் பின்னரும் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக குறிவைத்து தாக்கப்பட்டு வரும் நிலையில் சமூகத்தின்பால் அக்கறை கொண்டு செயற்பட்டுவரும் ஊடகவியலாளர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களை வவுனியா ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.

கடந்த காலங்களில் 54ற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுமுள்ள நிலையில் அவர்களுக்கான நீதி இன்றுவரை வழங்கப்படாமல் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும், சுதந்திரமும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டே வருவது யாவரும் அறிந்ததே.

இலங்கையில் 2020 பொது தேர்தலின் மூலம் புதிய அரசானது பெரும்பான்மை பலத்துடன் பதவியேற்றிருக்கும் நிலையிலும், ஊடக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல அண்மையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு ஊடகவியலாளர்களின் நலன் தொடர்பாக சந்திப்புக்களை மேற்கொண்ட நிலையில் முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளானமை கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அருகிவரும் நிலையில் இத்தாக்குதல் பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்தாரிகள் உடனடியாக கைது செய்யப்படுவதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களும் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்படவேண்டும்.

நாட்டின் இயற்கை வளங்களை கொரோனா காலத்தை பயன்படுத்தி கொள்ளையிட்டுவரும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதோடு
முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்தாரிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன் ஊடகவியலாளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக பணியாற்றும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதனையும் வவுனியா ஊடக அமையம் அழுத்தமாக வலியுறுத்தி நிற்கின்றது.

இத் தாக்குதல் சம்பவத்திற்கு விரைந்து செயற்பட்டு சரியான நீதி வழங்கத் தவறும் பட்சத்தில் ஊடகவியலாளர்களின் உரிமைகளையும் , பாதுகாப்பையும் வலியுறுத்தி ஜனநாயக ரீதியிலான போராட்டங்களையும் முன்னெடுக்க தயாராகவே உள்ளோம் என்பதனையும் கூறிக்கொள்கின்றோம்.

நன்றி.

வவுனியா ஊடக அமையம்,
வவுனியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 Views