மக்களின் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையைப் பாதுகாத்த ரிசாத் பதியுதீனை அரசாங்கம் பழிவாங்குகின்றது – ஏ.எம்.தாஜூதீன்

(எஸ்.எம்.அறூஸ்)

ஒரு மனிதனின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காக பாடுபட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கையானது அரசியல் வழிவாங்கலாகும். இந்த செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான ஏ.எம்.தாஜூதீன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் இடம்பெயர்ந்த வன்னி மாவட்ட மக்கள் வாக்களிப்பதற்கான பஸ் ஏற்பாடுகளுக்கு அரச பணத்தினை செலவழித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது தொடர்பில் கருத்துக்கேட்டபோதே மேற்படி கண்டனத்தை ஏ.எம்.தாஜூதீன் தெரிவித்தார்.

பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.தாஜூதீன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களுக்கும் பல்வேறு உரிமைகள் காணப்படுகின்றது. அந்த வகையில் ஒரு மனிதனின் பிரதான உரிமையாகக் காணப்படுவது வாக்குரிமையாகும். மக்கள் வாக்களிப்பதன் ஊடாகவே ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரமும், அதற்குப் பொறுப்பானவர்களும் தீர்மானிக்கப்படுகின்றனர். அவ்வாறான உயர்ந்த பட்ச உரிமையான வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார்.

1990ம் ஆண்டு வடபுலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் உடுத்த உடையுடன் வெளியேற்றியபோது அகதிகளாக புத்தளத்தில் தஞ்சமடைந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்கள் தமது வாக்குரிமையபை் பாதுகாப்பற்காகவும், தாங்கள் விரும்பிய பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காகவும், காலம் காலமாக தமது சொந்த இடமான வடபுலத்திற்கு னெ்று வாக்களித்து வருகின்றனர்.

அந்த வகையில்தான் கடந்த 2019ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் அந்த மக்கள் தமது சொந்ந இடத்திற்கு சென்று வாக்களித்தனர். அந்த மக்களின் தலைவராக பல தடவைகள் தெரிவு செய்யப்பட்டவர் என்ற வகையில் முன்னாள் அமைச்சர் ரிசாத் அவர்கள் புத்தளத்திலிருந்து அந்த மக்களை வன்னிக்குக் கொண்டு செல்வதற்காக அரசாங்கத்தின் அனுமதியுடன் நடவடிக்கை எடுத்திருந்தார். இதற்காக செலவிடப்பட்ட பணத்தினைக்கூட ஆறு நாட்களுக்குள் செலுத்தப்பட்டுள்ளது.

விடயம் இவ்வாறிருக்க தங்களது அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு உதவி செய்யவில்லை என்ற காரணத்திற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீனையும், அவரது குடும்பத்தையும் பழிவாங்குவதற்கு முற்படுகின்றனர். இது மிகக் கவலைக்குரிய விடயமாகும்.

தேர்தல் காலத்தில் எமது தலைவர் ரிசாத் அவர்கள் மீது அபாண்டமான பொய்களை சுமத்தினார்கள். சிங்கள பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்காக ரிசாத்தின் பெயரைப்பயன்படுத்தினார்கள். இறைவன் தலைவரைப் பாதுகாத்தான். செய்யாத குற்றங்களுக்காக தண்டனையை வழங்க இனவாத பேய்கள் தாண்டவமாடுகின்றது.

அரசாங்கம் தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்நாட்டு முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து வருகின்ற முஸ்லிம் தலைவரான ரிசாத் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கையானது இலங்கை முஸ்லிம்களை அவமானப்படுத்தும் செயற்பாடாகவும் பார்க்கப்படுகின்றது. அதேபோன்று சட்டமா அதிபரின் நடவடிக்கைகளும் இன்று விமர்சிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது தொடர்ந்தும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் நாம் எல்லோரும் வீதியில் இறங்கிப் போராடுவதற்கு தயாராக இருக்கின்றோம். ஏழை, எளிய மக்களின் மனங்களில் குடி கொண்டவர் ரிசாத்தாகும். அரசாங்கத்தின் பழிவாங்கும் செயற்பாட்டை இன்று நடுநிலையாகச் சிந்திக்கக்கூடிய சிங்கள மக்களும் எதிர்த்து வருகின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

31 Views