தல இருக்கும் போது வால் ஆடக்கூடாது.

-எம்.என்.எம்.யஸீர் அறபாத் -ஓட்டமாவடி-

தற்போது நாட்டில் பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்று அரசு அறுதிப்பெரும்பான்மைப் பலத்தைக்கொண்டதாக அமைந்திருக்கிறது.
இவ்வாறான சூழ்நிலையில், முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் கடந்த கால நிகழ்வுகள், பேரினவாதிகளின் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான கோசம், தற்போதைய அரசாங்கமும் பேரினவாதிகளின் கோசத்தை வலுவடையச்செய்து தான் இவ்வாறான வெற்றியை அடைந்திருக்கிறது. இதன் காரணமாக, எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் சார்ந்து எவ்வாறான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ளும், இனவாதிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து முஸ்லிம் சமூகத்திற்குப் பாதகமான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ளுமா? என்ற அச்சங்களும் ஏற்பட்டிருக்கிறது.
இவ்வரசாங்கத்தை எதிர்த்து முஸ்லிம் சமூகத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி  அதனோடு இணைந்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக் கூட்டணியில் போட்டியிட்டிருந்தது.
இவ்வாறு முஸ்லிம் தரப்பு எதிரணியில் இருந்ததனாலும், கடந்த காலங்களில் தங்களுக்குத் தேவை ஏற்பட்ட போது, தங்களுக்கான ஆதரவை தரவில்லை என்பதோடு, தங்களை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் என்ற கோபம் ஆட்சியாளர்களுக்குண்டு. இக்கோபம் காரணமாக முஸ்லிம் சமூகம் தண்டிக்கப்பட்டு விடுமென்ற அச்சம் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் உண்டு. 
இவ்வச்சம் காரணமாகவும், இன்னும்  ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமென்ற நோக்கிலும், மேற்சொன்ன இரு முஸ்லிம் கட்சி மீதான காழ்புணர்விலும் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட சிலர் மேற்சொன்ன இரு முஸ்லிம் கட்சிகளாலும் தான் முஸ்லிம்களுக்கு இந்நிலைமை என்ற கோசத்தை மக்கள் மத்தியில் பரப்புகிறார்கள்.
ஆளுங்கட்சி அதிக பெரும்பான்மையுடன் வென்று விட்டதென்பதற்காக அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மீதான கடந்த காலப்பார்வையை நாம் மறக்க முடியாது. அத்தோடு, பயந்து கொண்டு அவர்களோடு சரணாகதி அரசியலைச் செய்யவும் முடியாது. எதிர்காலத்தில் இந்த அரசாங்கம் முஸ்லிம்களின் விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளப்போகிறதென்பதை வைத்துத்தான் ஆதரவு கொடுப்பதா? இல்லையா? என முஸ்லிம் சமூகம் முடிவு செய்யலாம்.
இவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கம் 2/3 பெரும்பான்மைப் பலத்தோடு தாங்கள் நினைத்த விடயங்களைச் சாதிக்கலாம் என்ற நிலை இருக்கும் போது, தங்களை எதிர்த்து அரசியல் செய்த சிறுபான்மைக் கட்சிகளை இணைத்துக் கொண்டு பயணிக்கும் அவசியமில்லை. மேலும், இந்த அரசாங்கத்தோடு இணைந்து கொள்வதாக இருந்தால், எவ்வித உடன்பாடுகளுமின்றி இணைந்து கொள்ள வேண்டியது தான். உரிய கௌரவமும் கிடைப்பது சந்தேகம்.
அதை விட, எதிரணியில் இருந்து கொண்டு நாட்டிற்கு நன்மையான விடயங்களில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதும், பாதகமான விடயங்களின் போது அரசாங்கத்தை நெறிப்படுத்தும் நோக்கில் எதிர்த்து கருத்துகளை வெளியிடுவதோடு, மக்களை விழிப்படையச்செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடலாம். 
தங்களின் சமூகத்திற்கெதிரான விடயங்களை அரசாங்கம் முன்னெடுக்கும் போது, அவற்றுக்கெதிராக குரல் கொடுப்பதோடு, அதன் நியாயங்களை தேசிய, சர்வதேச மயப்படுத்தி தீர்வுகளைக் காண முடியும். முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது இன்று பெரும்பான்மை இன மக்கள் கொண்டுள்ள தப்பான அபிப்பாராயங்களை இல்லாமலாக்கி,  அவர்களின் ஆதரவையும் எதிர்காலத்தில் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவை இவ்வாறிருக்கத்தக்கதாக முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப்பெற்ற கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆளும் தரப்போடு இணையவிருப்பதாக பல கருத்துக்கள் பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.
சஜித் அணியினால் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் வாக்குறுதி நிறைவேற்றப்படாமை போன்ற காரணங்களைச் சொல்லி முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சஜித் பிரமதாசவை கடுமையாகச்சாடி ஊடக அறிக்கைகள் வெளிட்டதும், இவ்விருவரும் ஆளுந்தரப்புக்கு ஆதரவான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவதை வைத்தும் பல கருத்துக்கள் சமூக மட்டத்தில் பேசப்படுகிறது. இதனைப்பலரும் விமர்சிப்பதைப் பார்க்கலாம்.
இவ்வாறான விமர்சனங்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீதான தவறான புரிதலை மென்மேலும் பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் விதைத்து விடுமென்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.
பதவிகளுக்காக சோரம் போன சமூகமில்லை முஸ்லிம் சமூகம் என்பதோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கமும் பதவிகளுக்காக சோரம் போனதுமில்லை என்பதை கடந்த காலங்களில் நிரூபித்திருக்கிறது.
எனவே, இவ்வாறான கருத்துக்கள் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் பேசப்படுவது, தலைவர் இருக்கத்தக்கதாக கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுவதால் ஏற்பட்டதாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்திற்கு ஒரு கட்டுக்கோப்பிருக்கிறது. முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப்பெற்ற கட்சி என்ற அடிப்படையில் நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பில்லாத தீர்மானங்களை கட்சி என்ற அடிப்படையில் சகலரது அபிப்பிராயங்களைக் கேட்டறிந்து, கட்சியின் உயர்பீடத்தைக்கூட்டி மக்களின் அபிப்பிராயம், தற்போதைய சூழ்நிலை, சாதக, பாதகங்களை ஆராய்ந்து இறுதி முடிவை தலைமை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். 
அவ்வாறின்றி, ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ப கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பது சமூகத்திற்கு மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதோடு, மக்கள் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான நன்மதிப்பும் இழக்கப்படும் நிலை தோன்றும்.
எனவே, தல இருக்கும் போது வால் ஆடக்கூடாது. அவ்வாறு ஆடும் போது, விரும்பத்தகாக விளைவுகள் ஏற்படுவதோடு, கட்சியின் ஒழுக்கமும் கேள்விக்குறியாகி விடும். இது விடயத்தில், பொறுப்புள்ளவர்கள்  பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

55 Views