தமது போர்க்களமாக இலங்கையை மாற்ற சீனாவும், அமெரிக்காவும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன

மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான பிணைப்பு அல்லது பிளவு அரசியலமைப்பு அதிகாரங்கள் மூலம் சர்வாதிகாரிகளாக மாறுவதன் ஊடாக தீர்மானிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்களிடமுள்ள நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டே மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான பிணைப்பு தீர்மானிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டு முதல் முறையற்ற வகையில் கடன் பெறப்பட்டதால், இன்று நாடு அதிகக் கடன் சுமையில் சிக்கியுள்ளதாக அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் பெறுமதிமிக்க வளங்களை பகுதி பகுதியாக சீனா கையகப்படுத்தியுள்ளதுடன், மிகவும் பெறுமதிமிக்க பொருளாதார மற்றும் பாதுகாப்பு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ஏற்கனவே நாடு இழக்க நேரிட்டுள்ளதாக விஜயதாச ராஜபக்ஸ ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

இதன் விளைவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய வல்லரசுகள் இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கையகப்படுத்துவதற்கு முயல்கின்றமை கண்களுக்கு புலப்படாவிட்டாலும் சீனாவும் அமெரிக்காவும் எதிர்காலத்தில் தமது போர்க்களமாக இலங்கையை அமைத்துக்கொள்வதற்கான போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பு நெருக்கடிகளை உருவாக்கிக் கொண்டு அரசியல் ரீதியிலான பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்வது புத்திசாதுர்யமற்றது எனவும் இதன் மூலம் நாட்டின் ​தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டும் சீரழிவதை தடுக்க முடியாது எனவும் விஜயதாச ராஜபக்ஸ ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அநேகமான விடயங்கள் தொடர்பில் மக்களின் எதிர்ப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், மக்கள் நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளபட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 Views