சீன அரசாங்கத்துடன் நெருக்கமாகத் தொடரும் இலங்கையின் உறவு..தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்த இந்தியா!!

இந்தியா – அமெரிக்காவைச் சீண்டும் விதத்தில் சீன அரசு ராஜபக்ச அரசுடனான நெருக்கத்தைப் பகிரங்கமாகத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசு கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய மத்திய அரசின் உயர்மட்டத்தினர் விரைவில் பேச்சு நடத்தவுள்ளனர். இதற்கான அழைப்பை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுத்துள்ளது என நம்பகரமாக அறியமுடிகின்றது.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அண்மையில் காணொளி உரையாடலை மேற்கொண்டிருந்தார். அதன்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தியிருந்தார்.13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அகற்றும் முனைப்பில் ராஜபக்ச அரசு ஈடுபட்டுள்ள நிலையில், மோடியின் இந்த அறிவிப்பு கொழும்பு அரசுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.இதன் பின்னர் சீனாவுடன் ராஜபக்ச அரசு நெருக்கத்தைக் காண்பிக்கத் தொடங்கியது. இலங்கை விவகாரத்தில் சீனாவின் அணுகுமுறை தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் விமர்சனங்களை முன்வைத்திருந்த பின்னணியில், சீன உயர்மட்டக் குழுவின் கொழும்புக்கான திடீர் பயணம் அமைந்திருந்தது.இலங்கையுடன் நெருக்கமான உறவைப் பேணுவதாகக் காண்பிக்கும் வகையில் கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தொடர்ச்சியாக டுவிட்டரில் பதிவுகளையும் வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில், இந்திய மத்திய அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குப் பேச்சுக்கான அழைப்பை டில்லி விடுத்துள்ளது.காணொளி ஊடாக இந்தப் பேச்சு விரைவில் நடைபெறவுள்ளது. இந்திய மத்திய அரசின் உயர் மட்டத்தினர், டில்லி தரப்பின் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட பல தரப்புக்களுடன் காணொளி ஊடான சந்திப்பு நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

45 Views