கொரோனா கோரத் தாண்டவம் – 60 மணித்தியாலத்துள் 832 பேருக்கு தொற்று

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்ட மேலும் 124 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடையில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் கடந்த 60 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் நேற்றைய தினம் 5 ஆம் திகதி 101 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அதன்பின்னர் 220 பேர் கொரோனா தொற்றாளர்களா அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், இன்று காலை முதல் பரிசோதனை அடிப்படையில் கொரோனா தெற்றாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது.
ஆடை தொழிற்சலையின் 39 வயதுடைய பெண் ஊழியர் கடந்த சனிக்கிழமை இரவு கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்டார்.
அதனையடுத்து அவரது மகளிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனைகளில் அவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் மீரிகம, குருணாகல், கட்டான, திவுலப்பிட்டிய, மொனராகலை, யாழ்ப்பாணம், சீதுவ, ஜா – எல, அம்பாறை, மகர ஆகிய பிரதேசங்களிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் அலையாகவே தற்போதைய நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்திருந்தார்.
தற்போது,அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக நிலைமையை கட்டுபடுத்தும் வகையில் கம்பஹா பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட கிரிந்திவெல, நிட்டம்புவ, தொம்பே, மினுவாங்கொடை, கணேமுல்ல,பூகொடை, மீரிகம மற்றும் வெயங்கொட உள்ளிட்ட 14 பொலிஸ் பகுதிகளில் இன்று மாலை 6.00 முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேலை இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், இலங்கையில் கொவிட்-19 பரவலின் தற்போதைய நிலைமை குறித்து நாளைய தினமே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.
உயர்தரம் மற்றும் புலமைபரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை கல்வி அமைச்சு நாளை வெளியிட உள்ளதாகவும், கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்த மக்கள் சுய சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றுதல் அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
The post கொரோனா கோரத் தாண்டவம் – 60 மணித்தியாலத்துள் 832 பேருக்கு தொற்று appeared first on Vakeesam.