ஒரே நாடு ஒரே சட்டம் என்பது பெரும்பான்மை இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்கான ஒரே சட்டம் என்பதை தலைவர் ரிஷாத்தின் கைது முயற்சிகளின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. அ.இ.ம.கா. நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் காட்டம்

 


சப்னி –

“ஒரே நாடு ஒரே சட்டம் ” என ஜனாதிபதி தனது பாராளுமன்ற அக்கிராசன உரையில் கூறிய வாசகம் பற்றி இதுவரையில் தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை. ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன் தலைவரான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன் கைது முயற்சிகளை பார்க்கின்றபோது, ஒரே நாடு ஒரே சட்டம் என்பது, இலங்கை நாட்டில் இனவாதிகளை திருப்தி படுத்துவதற்கான ஒரே சட்டம் என புரிந்து கொள்ள முடிகின்றது. இது  சட்ட ஆட்சி, நல்லாட்சி போன்ற நல்ல விழுமியங்களற்ற ஒரு ஏகாதிபத்திய வல்லாட்சியை நோக்கி அபாயகரமான சூழலுக்குள் இந்த நாடு தள்ளப்படுவதையே காட்டுகிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஷாரப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் சமூகமொன்றின் தலைவர் அல்லது பிரதிநிதி என்ற வகையில் மன்னாரிலிருந்து புத்தளத்திற்கு அகதிகளாக வெளியேறிய மக்களுக்கு அவர்களின் அடிப்படை வாக்குரிமையை பதிவு செய்ய போக்குவரத்து வசதிகள் செய்தமை ஒரு பெரும் குற்றச்சாட்டு என சித்தரித்து அரசியல் செய்யும் அரசாங்கத்தின் அரசியல் வறுமையை நினைத்து வெட்கப்படுகிறேன்.
இனவாதத்தை மூலதனமாக வைத்து ஆட்சியை பிடித்த இந்த அரசாங்கம் சரிந்து போகும் தம் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை தொடர்ச்சியாக தக்க வைக்க இப்படியான கைங்கரியத்தை கட்டவிழ்த்துள்ளனர்.

பெரும் பெரும் சர்ச்சைக்குரிய கொலைக்குற்ற வழக்குகளை எதிர்கொண்டு பின்னர் அதிகாரம் கிடைத்தவுடன் அவற்றை மூடிமறைத்து இப்போது சொகுசாக வாழும் ஆட்சியாளர்கள் நேர்மையான மக்கள் தலைவன் ரிஷாத் பதியுதீனை அற்ப காரணங்களை காட்டி கைது செய்ய முயல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

முன்பதாக அரசாங்கத்தின் நிர்வாக போக்குகள் உள்ளிட்ட விவகாரங்களில் சற்றளவு திருப்தியோடு இருந்த நாம், அரசாங்கத்தின் தற்கால தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரல்களை பார்க்க்கிற போது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.

நீதிக்கு புறம்பாக வெறும் அரசியல் பழிவாங்கல்களுக்காக எம் தலைவர் ரிஷாத் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் முயற்சிகளை உடனடியாக இந்த அரசாங்கம் கைவிடுவதன் மூலம் சிறுபான்மை மக்கள் சமூகத்தை அரவணைத்து செல்லும் நம்பிக்கை எம் மக்களுக்கு ஏற்படும். இல்லாத பட்சத்தில் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களை இந்நாட்டிலிருந்து துருவப்படுத்தும் இத்தகைய செயற்பாடுகளால் இந்நாடு மீண்டும் அதாள பாதாளத்திற்கு செல்லும் என்பதில் எந்த ஐயமுமில்லை என அவர் தனது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

97 Views