ஊவா மாகாண இலங்கைக்குள் மறைந்த நிலையில் காணப்படுகிறது அருட்தந்தை ஜுட் நிசாந்த சில்வா

(-எம். செல்வராஜா-பதுளை நிருபர்)                                26-08-2020

ஊவா மாகாண இலங்கைக்குள் மறைந்த நிலையிலேயே, இருந்து வருகின்றது. இந் நிலையினை மாற்றி ஊவா மாகாணத்தை வெளிக்கொணர வேண்டியது ஊவா மாகாண ஊடகவியலாளர்களது தார்மீகக் கடமையாகும். ஆகவே, அத் தார்மீகக் கடமையை, அவ் ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டுமென்று ‘உஸ்கொட்’ நிலையப் பணிப்பாளர் அருட்தந்தை ஜுட் நிசாந்த சில்வா குறிப்பிட்டார்.

பதுளை ‘உஸ்கொட்’ நிலைய கேட்போர் கூடத்தில் 26-08-2020ல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, ‘உஸ்கொட்’ நிலையப் பணிப்பாளர் அருட் தந்தை ஜுட் நிசாந்த சில்வா கலந்து கொண்டு பேசும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அருட்தந்தை தொடர்ந்து தமதுரையில், ‘அன்னை தெரேசாவின் கூற்றொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. ‘உங்களால் செய்ய முடியாததை என்னால் செய்ய முடியும். என்னால் செய்ய முடியாததை உங்களால் செய்ய முடியும். ஆனால், நாம் இருவரும் சேர்ந்தால் பெரிய காரியங்களை செய்ய முடியும்’ என்பதேயாகும். அதுபோன்று, நம்பிக்கையும் முதன்மைப்படுத்தப்படுகின்றது. ஆகவே, இம் மாகாண ஊடகவியலாளர்கள், இம் மாகாணத்தை இலங்கைக்குள் உள்ளடக்க வேண்டும்.

ஊவா மாகாணம், எமது நாட்டின் மிகவும் பின் தங்கியப் பிரதேசமாகக் கணிக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் மிகவும் வறுமை நிலை தாண்டவமாடும் பிரதேசமாக இருந்து வருவதும் ஊவா மாகாணத்தில் தான். அத்துடன் வாழ வழியின்றி நாட்டிலேயே அதிகரித்த நிலையில் தற்கொலைகள் காணப்படுவதும், இம் மாகாணத்தின் தனமல்விலைப் பிரதேசத்திலாகும்.

இந்நிலையில் இம் மாகாணம் இருந்த போதிலும், திறமைசாலிகளும் இம் மாகாணத்தில் இருக்கவே செய்கின்றனர். ஆனால், அவர்களும் வெளிக் கொணரப்படாமல், ஊக்குவிக்கப்படாமல், கிணற்றுத் தவளைகள் போல் இருந்து விடுகின்றனர். இத்தகையவர்களை வெளிக்கொணர்வதும், அவர்களை ஊக்குவிப்பதும் இம் மாகாண ஊடகவியலாளர்களுடைய தார்மீகக் கடமையாகும்.

இம் மாகாணத்தில் ஹொரந்துவ என்ற கிராமம் ஒன்று உள்ளது. அக் கிராமத்தில் 56 குடும்பங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை. மலை முகட்டிலிருந்து வடிந்து வரும் நீரை சேகரித்து, அதனையே அக் குடும்பத்தினர் பாவித்து வருகின்றனர். மிகவும் வறுமை நிலையிலேயே, இங்குள்ள மக்கள் உள்ளனர். இம் மாகாணத்தில் மறைந்திருக்கும் ஒரு கிராமமாகவே, இக் கிராமம் கணிக்கப்படுகின்றது. மறைந்திருக்கும் ஊவா மாகாணத்தை இலங்கையில் உள்ளடக்கி, வெளிக்கொணர வேண்டும். அரச அதிகாரிகளும் இப்பிரதேசத்தைப் பார்ப்பதில்லை.

அடுத்து, ஊவா சமூக, பொருளாதார, மனித அபிவிருத்தி நிலையமென்ற ‘உஸ்கொட்’ நிலையம், ‘கரிட்டாஸ்’ நிறுவனம், ‘செடெக்’ நிறுவனம் ஆகியன கத்தோலிக்க சபையின் கீழ் நடாத்தப்படும் சமூக, பொருளாதார, மனித அபிவிருத்தி அமைப்புக்களாகும்.

கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டங்கள், உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டோர், வாழ வழியின்றி தவிப்போர், அனாதைகள், விசேட தேவையுடையவர்கள், சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்க வேலைத்திட்டங்கள், சுய தொழில் விரும்புவோர் ஆகியோருக்கான விசேட வேலைத்திட்டங்கள், சர்வமத வேலைத்திட்டங்கள், பதிவு திருமணம் செய்யாமல் நீண்டகாலமாக வாழ்ந்து வருவோருக்கு சட்டப்பூர்வ பதிவுத் திருமணம் செய்து வைக்கும் வேலைத்திட்டங்கள், தேசிய அடையாள அட்டைகள், பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாதவர்களுக்கு, அவைகளைப் பெற்றுக்கொடுத்தல் பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள், குரலற்று, உரிமைகளற்று இருப்பவர்களுக்கு அவற்றினைப் பெற்றுக் கொடுத்தல் போன்றவற்றையும் துரிதமாக மேற்கொண்டு வருகின்றோம். இவற்றின் பயனை மக்கள் பூரணமாக அனுபவித்து வருகின்றனர்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

48 Views