அரசியலமைப்பின் 20 வது திருத்தம் மோசமான பாதிப்பினை ஏற்படுத்தும்.

 

“20” நாட்டுக்கு நன்மை தருமா? சட்டவல்லுநர்கள் கூறுவது என்ன?

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தற்போது இலங்கை அரசியலில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ள விவகாரமாக உள்ளது. இந்த திருத்தம் குறித்து பல்வேறு தரப்பினரும் சாதக பாதக கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் இலங்கையின் சட்டத்துறையில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற சட்டவல்லுநர்கள் இந்த உத்தேச இருபதாவது அரசியலமைப்பு திருத்தம்

கணக்காய்வு அபிவிருத்திக்கு தடையா? சட்டத்தரணி உந்துல் பிரேமரத்ன

20வது திருத்தம் தொடர்பில் பேசும் போது நாட்டின் அபிவிருத்தியினை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த திருத்தம் முன்வைக்கப்படுகின்றது என்று அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தத்தின் வரைவுப் பிரதியினைப் பார்க்கும் போது அரசாங்கம் முன்வைத்த விடயங்கள் எதுவும் அதில் இல்லை என்றே கூற வேண்டியுள்ளது. திருத்தம் குறித்து அரசாங்கம் முன்வைக்கும் கருத்துக்களும், அதில் உள்ள விடயங்களும் முற்றிலும் வேறுப்பட்டுள்ளது. உதாரணமாக நாட்டை அபிவிருத்தி செய்ய கணக்காய்வு தொடர்பான சட்டத்தினை பலவீனப்படுத்த தேவையில்லை. அத்துடன் கணக்காய்வு செயற்பாடுகளையும் பலவீனப்படுத்த தேவையில்லை தானே?

19வது திருத்தத்தினூடாக உருவாக்கப்பட்ட ஒப்பீட்டளவிலான ஜனநாயகக் கட்டமைப்புகளின் அழுத்தங்கள் இன்னும் சில காலங்களின் பின்பு பல்வேறு மட்டங்களில் செல்வாக்கு செலுத்தியிருக்கும். ஆனால் 20வது திருத்தம் முழுமையாக அதிகாரத்தினை தனி ஒருவருக்கு வழங்கவே முயற்சிக்கின்றது. நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் நிலவிய அராஜகமான பின்னணி, தீவிரவாத தாக்குதல் என்பனவற்றை முன்வைத்தே இந்த திருத்தம் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் 19வது திருத்தம் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தில் பிரச்சினைகள் ஏற்படவில்லை. பிரதமரும் ஜனாதிபதியும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தமையே எப்பொழுதுமே பிரச்சினைக்கு உரிய முக்கியமான காரணமாக இருந்தது. சந்திரிகா – ரணில் அரசாங்கத்திலும் இவ்வாறான பிரச்சினை தொடர்ந்து இருந்தது. இந்நிலையில், 20வது திருத்தத்தின் பின்பு எவரின் கரங்களில் அரசாங்க அதிகாரம் சென்றாலும் அராஜக நிலை ஏற்படக் கூடிய சாத்தியம் உள்ளது.

ஜனாதிபதி நியமனம் தொடர்பான வயது எல்லை குறைக்கப்படுவதனூடாக நாட்டின் அபிவிருத்திக்கு நிகழப் போகும் நன்மை என்ன? கணக்காய்வினை பலவீனப்படுத்துவது நாட்டை முன்னேற்றுவதற்காகவா? கடந்த காலங்கள் முழுவதும் கணக்காய்வு திணைக்களத்திற்கு கிடைத்த சுயாதீனத்தன்மை காரணமாக நாட்டிற்கு நன்மை விளைந்ததே ஒழிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. உண்மையிலேயே கணக்காய்வு சம்பந்தமான விடயங்கள் எப்படி அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் என்பது பற்றி ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

மோசமான பாதிப்பினை ஏற்படுத்தும். ஜனாதிபதி சட்டத்தரணி சுனில் லங்காதிலக்க

இந்த 20வது திருத்தம் 78ல் இருந்த அரசியலமைப்பினை நோக்கி நாட்டை கொண்டு செல்கின்றது என்று அனைவராலும் கூறப்படும் கருத்து உண்மை தான். இது மீண்டும் ஒரு சர்வாதிகாரியை உருவாக்கும் செயல் என்று தான் கூற வேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்களை ரத்து செய்கின்றமை மிகவும் மோசமான செயலாகும். அத்துடன் மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றது என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டும் உண்மையானதே. இந்த செயற்பாடுகள் எம்மைப் போன்ற நாடுகளுக்கு மிகவும் மோசமான பாதிப்பினை ஏற்படுத்தும். பாராளுமன்ற அதிகாரம் முழுமையாக ஜனாதிபதி வசமானால் மக்களின் இறைமைக்கு ஏற்படப் போகும் கதி என்ன? சுயாதீன ஆணைக்குழுக்கள் இன்றி மக்களின் இறைமை என்பதும் இல்லை. எனவே எப்படிப் பார்த்தாலும் 20வது அரசியலமைப்பு திருத்தம் என்பது மிகவும் மோசமானது. 20வது திருத்தத்தினூடாக ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுவதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

42 ஆண்டுகள் கடந்தாயிற்று எங்கே அபிவிருத்தி? சட்டத்தரணி ஜயந்த தெஹிஅத்தகே

நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ள ஜனாதிபதி ஒருவரைக் கொண்ட அரசியலமைப்பு தேவை என்ற காரணத்தினை முன்வைத்தே 1978ம் ஆண்டு அரசியலமைப்பு முன்வைக்கப்பட்டது. இதே கருத்தினையே 1965ல் ஜே.ஆர்.ஜெயவர்தன ஒரு பொதுக் கூட்டத்தில் பகிரங்கமான முன்வைத்திருந்தார். அந்த சமயத்தில் டட்லி சேனாநாயக்க போன்ற ஐ.தே.க தலைவர்கள் அக்கருத்துடன் உடன்படவில்லை. ஆயினும் ஜே.ஆர் 1978ம் ஆண்டு அவ்வாறானதொரு அரசியலமைப்பினையே உருவாக்கினார். ஆனால் 42 ஆண்டுகள் கடந்தாயிற்று. எங்கே அந்த அபிவிருத்தி? 2015ல் தான் ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு ஓரளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒரு சிலர் பௌதீக ரீதியில் கட்டிடங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் அபிவிருத்தி ஏற்பட்டதாக குறிப்பிடுகின்றனர். ஆனால் மக்களின் வாழ்வில் அபிவிருத்தி இதுவரை ஏற்படவில்லை. 42 ஆண்டுகள் நாட்டில் எந்தவிதமான முன்னேற்றங்களும் ஏற்படாத நிலையில் நாங்கள் ஏன் அவ்வாறான ஓர் அரசியலமைப்பு முறையை தொடர்ச்சியாகப் பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டும்? 19வது திருத்தத்தில் உண்மையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பறிக்கப்படவில்லை. மாறாக அவரின் அதிகாரங்களைக் கண்காணிக்கும் பொறிமுறை ஒன்றே உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் 1978ல் ஜே.ஆர் கொண்டு வந்த விடயங்கள் சிற்சில மாற்றங்களுடன் அவ்வாறே இப்பொழுதும் பின்பற்றப்படுகின்றது. ஜே.ஆருக்காக அன்று 1978ம் ஆண்டு அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. 20ம் திருத்தம் இன்று ஜி.ஆருக்காக கொண்டு வரப்படுகின்றது என்று கூறினால் அது மிகையில்லை. ஆனால் அரசியலமைப்பு திருத்தம் என்பது பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் நலனைக் கருதியதாக இருக்கக் கூடாது. மக்களுக்காக கொண்டு வரப்பட வேண்டும். எமது நாட்டின் அரசியல் அமைப்பு திருத்த வரலாற்றின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஏதோ ஒரு உள் நோக்கம் பின்னணியில் செல்வாக்கு செலுத்தியிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

மூன்று விடயங்கள் தொடர்பில் கடும் எதிர்ப்பு. ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன லால் த சில்வா

ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்களுள் நானும் ஒருவர். இதன்படி தற்போதைய அரசியலமைப்பில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அவ்வாறே இருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன். சர்வதேச அழுத்தங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியமான விடயம். தேசியவாத கட்சிகள் நாட்டில் இருக்கின்ற பின்னணியில் எமது தலைவர்கள் சதுரங்க காய்களைப் போன்று அரசியல் சதுரங்க நகர்வுகளில் மாட்டிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பொதுபல சேனா மற்றும் ஹெல உறுமய உட்பட இனங்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் கட்சிகளும், அமைப்புகளும் நாட்டின் ஆட்சி அதிகாரத்தின் மீது எப்படியோ செல்வாக்கு செலுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. இதனால் தான் இவ்வாறு இனங்களை முன்னிலைப்படுத்தும் கட்சிகளை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்;றை தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறான பின்னணியில் தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை எமது நாட்டில் இருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன். எனினும் எந்தவொரு அரசியலமைப்பினை உருவாக்கும் போதும் நாட்டின் ஸ்திரத்தன்மையை ஒரு புறம் பாதுகாக்கும் அதேவேளை, நாட்டின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவும் வேண்டும். அதேநேரம் அவை இரண்டுக்கும் இடையில் ஓர் சமநிலையான தன்மை பேணப்படல் வேண்டும். அவ்வாறானதொரு அரசியலமைப்பு தான் நல்லது என்று நான் கருதுகின்றேன். ஆனால் இந்த திருத்தத்தினூடாக அரசின் உயர் பதவிகளுக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் வருவதனை நான் எதிர்க்கின்றேன். அத்துடன் ஜனாதிபதியின் தீர்மானத்தினை அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்து கேள்விக்குட்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள வரன்முறைகளையும் நான் எதிர்க்கின்றேன். கணக்காய்வுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கும் நான் எதிர்ப்பு தெரிவிக்கின்றேன். எனது அபிப்பியாரத்தின்படி பூட்டான் நாட்டில் உள்ளது போன்றதொரு அரசியலமைப்பினையே நாம் உருவாக்க வேண்டும். அந்நாடு மதச்சார்பில்லாத ஒரு நாடு. ஆனால் அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது பௌத்த தத்துவத்திற்கு ஏற்ப அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரினதும் கருத்துக்களைக் கேட்டறிந்து, பொறுமையாகவும், நீண்ட கால கலந்துரையாடல்களின் பின்பு நாமும் நமக்கு பொறுத்தமான அரசியலமைப்பினை உருவாக்க வேண்டும். பூட்டான் அரசியலமைப்பினை உருவாக்க ஆறு ஆண்டுகளை தேவைப்பட்டுள்ளது. அத்துடன் தனிப்பட்ட நோக்கங்களுக்காக அரசியலமைப்பினை உருவாக்கக் கூடாது. ஜே.ஆர் தனது தனிப்பட்ட தேவைகளுக்காக 1978ம் ஆண்டு அரசியலமைப்பினை உருவாக்கினார். அதன் எதிர்விளைவாக தான் அதற்கு பின்னரான அனைத்து திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன. அவ்வாறில்லாமல் இந்தியா மற்றும் பூட்டானைப் போன்று நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடிய அரசியலமைப்பே எமது நாட்டிற்கு அவசியமாகும்.

பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. சட்டத்தரணி நெவில் கருணாரத்ன

தற்போது ஆளும் கட்சிக்கு அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கான அதிகாரம் உள்ளது என்பது உண்iயாயினும், இப்பொழுது நாட்டின் தேவை என்ன என்பதனை சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. தற்போது நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை காணப்படுகின்றது. அதற்கான தீர்வு 20வது அரசியலமைப்பு திருத்தத்தில் இல்லை. நாட்டின் நாலாபுறங்களிலும் இருந்து பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்;வு காணுமாறு கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. நல்லாட்சி காலத்திலும் இவ்வாறான கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மக்களால் வழங்கப்பட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். இந்த 20வது திருத்த வரைவுப்பிரதியின் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்கின்றது. ஆனால் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதனையே முதலில் அரசாங்கம் செய்திருக்க வேண்டும். அமைச்சரவை விரிவாக்கம் என்பது தேவையற்ற செலவினத்தினை நாட்டிற்கு ஏற்படுத்துகின்றது. நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள இனப்பிரிவினை, மதப் பிரிவினை என்பனவும் குறித்தும் அக்கறைக் காட்ட வேண்டியுள்ளது. அவற்றை தடுப்பதற்கு ஏற்றவாறான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும். அதன்படி ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தற்போது அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த 20வது அரசியலமைப்பு திருத்தம் என்பது மக்களின் எதிர்;பார்ப்பு அல்ல. அத்துடன் அவர்களால் கோரப்பட்டதும் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

39 Views